கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
Vikatan December 28, 2024 03:48 AM

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன்(43). இவர் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபி வகுப்பு எடுக்கும் பேராசிரியராக பணியாற்றினார். கும்பகோணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் சில வருடங்களுக்கு முன்பு அந்த கல்லூரியில் படித்து வந்தார். மாணவியான அவர் அப்போது மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டம்

இந்தநிலையில், கல்லூரியில் அரபி வகுப்பு எடுத்த போது, ஜியாவுதீன் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தகாத முறையில் பழகி பாலியல் தொல்லை கொடுத்தாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவியிடம் தவறாக நடந்து வந்துள்ளார் ஜியாவுதீன். இந்த நிலையில் ஜியாவுதீன், மேலும் பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து கல்லூரியில் படித்த அந்த மாணவிக்கு தற்போது தெரிய வர அதிர்ச்சியடைந்ததுடன், ஜியாவுதீன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜியாவுதீனிடம், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துர்கா விசாரணை மேற்கொண்டார். இதில் அந்த பெண்ணிடம் ஜியாவுதீன் பாலியல் ரீதியாக பழகியதை ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

ஜியாவுதீன்

இதையடுத்து ஜியாவுதீன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையறிந்த ஜியாவுதீன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஸ்டேஷன் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜியாவுதீனை, திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் ஜியாவூதீனை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே பணியில் இருந்து நீக்கிவிட்டதாக போலீஸிடம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் கல்லூரியை சேர்க்கக்கூடாது என்றும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.