விருதுநகர்: நரிக்குடி அருகே அதிமுகவை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலின் போது அதிமுக நிர்வாகி ஒருவரால் கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் நரிக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளராக பூமிநாதன் பணியாற்றி வந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அந்த பதவியில் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் வாட்ஸ்-ஆப் குழுக்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகளில், தனது பதவியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் பூமிநாதன். இதனால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இந்த விவகாரம் அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் பிரபாத் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலின் போது, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை பயன்படுத்தி பிரபாத் ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அ.முக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.