ராஜபாளையம்: 'என் தற்கொலைக்கு காரணம் போலீஸ்'- கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாற்றுத்திறனாளி
Vikatan January 09, 2025 03:48 AM

மது விற்கச் சொல்லி தொந்தரவு அளித்ததாலும், தகாத வார்த்தைகளால் போலீஸ் திட்டியதாலும் மனம் உடைந்து தற்கொலை செய்வதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). விபத்தில் கைகளை இழந்ததால் 60 சதவீத மாற்றுத்திறனாளியானார்.

கடிதம்2

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிவந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு போலீஸூக்கும் அவ்வபோது அவர், குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையிலும் மாத இலக்குக்காக திருட்டு மது விற்பனை வழக்கின்பேரில் செல்வக்குமாரை அடிக்கடி போலீஸார் கைதுசெய்துள்ளனர். இதையறிந்த ஊரார், செல்வக்குமார் இனி மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், மது விற்பனை செய்யாமல் மாற்று வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமை காவலரான செல்வின் என்பவர், மதுவிற்பனை செய்யச் சொல்லி செல்வக்குமாரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கடிதம்1

இதனை செல்வக்குமார் மறுத்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 22ந்தேதி சொந்த பயன்பாட்டுக்காக செல்வக்குமார் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டருகே செல்வக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் செல்வின், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை வீடியோ எடுக்க முயன்ற செல்வக்குமாரின் மனைவியையும் தாக்கியதோடு அத்துமீறி பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, செல்வக்குமாரின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வக்குமார், தற்கொலை செய்யும் முடிவெடுத்து தன் சாவுக்குக் காரணம் காவலர் செல்வின் தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி போராட்டம்

தற்கொலை குறித்து தகவல் அறிந்து போலீஸார் விசாரணைக்கு வந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றம்சாட்டப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்காமல் செல்வக்குமாரின் உடலை எடுத்து செல்லவிடமாட்டோம் என கூறி தடுத்துள்ளனர். அப்போது, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசிய சரக காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி, 'உரிய விசாரணை நடத்தப்படும்' என உறுதி அளித்ததையடுத்து செல்வக்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, செல்வக்குமாரின் உறவினர்கள் பேசுகையில், 'இறப்புக்கு காரணமான காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை செல்வக்குமாரின் உடலை வாங்க மாட்டோம்' எனத் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.