திருச்சி மாவட்டம், திருநெடுந்துங்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் கடுமையான வயிற்று வலியால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் கல்லீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இருதயநோய் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலின் வலது பக்கத்தில் உள்ள 60 சதவீத கட்டியை கல்லீரலுடன் சேர்த்து அகற்றினர். இதயத்தால் பம்ப் செய்யப்பட்ட ரத்தத்தில் 25 சதவீதம் கல்லீரலுக்குச் செல்வதால், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் நவீன கருவிகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையை மிகுந்த கவனத்துடன் செய்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் டாக்டர்கள் கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். இந்த அறுவை சிகிச்சையில் கல்லீரலின் மேல் பகுதியில் இருந்த 1.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.
மனித உடலில் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பு என்பதால், மக்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்று, அதிகப்படியான மது அருந்துதல், பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய் அபாயம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திருச்சி அரசு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இது தொடர்பான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவதால், உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.