முதலமைச்சரின் மகள் குறித்து முகநூலில் அவதூறு வெளியிட்ட நபர் வெளிநாட்டிலிருந்து வந்தபோது மும்பை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சென்னை சோழிங்கநல்லூர், பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் தமிழரசன் (வயது 35). பொறியியல் பட்டதாரி, நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக உள்ளார். இவர் 2020-ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை குறித்து 2023-ஆம் ஆண்டு முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து, சைபர் க்ரைம் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505(1)(பி), 509 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தமிழரசன் வெளிநாட்டில் இருந்ததால் விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்துள்ளார். தமிழரசன் குறித்து எமிக்ரேஷன் அலுவலகத்தில் ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழரசனை மும்பை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்து,சிறையில் அடைத்தனர். அவரை சைபர் க்ரைம் போலீஸார் மும்பை விரைந்து, தமிழரசனை நீதிமன்றத்திலிருந்து காவலில் எடுத்து மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து, நீதிபதி கலைவாணியிடம் ஆஜர் படுத்தினர். இதையடுத்து, தமிழரசனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் தமிழரசனை மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். முன்னதாக, தமிழரசன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நீதிமன்றத்தின் வாசலில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.