ஆருத்ரா தரிசனம்... மாங்கல்யம் நிலைக்க இதை செய்ய மறக்காதீங்க!
Dinamaalai January 13, 2025 11:48 AM

இன்று ஆருத்ரா தரிசன நாளில், மாங்கல்யம் நிலைக்க இதை செய்ய மறக்காதீங்க. திருவாதிரை களி செய்யும் ஈஸியான ரெசிப்பி இது தான். மார்கழி மாதத்தில் ஆடல் அரசனின் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடல் அரசனான நடராஜனை தரிசித்து, உங்கள் வீட்டில் திருவாதிரை களியையும், 7 கறி கூட்டும் செய்து படையல் போட்டு, மனமுறுகி பிரார்த்தனைச் செய்தால், மாங்கல்யம் நிலைக்கும். சுமங்கலி பாக்கியம் பெறலாம்.

இன்றைய ஆருத்ரா தரிசன நாளில் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். திருவாதிரைக் களி என்பது விசேஷமானது. திருவாதிரைக் களியை மிக எளிதாக நிமிஷத்தில் உங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். எப்படி செய்தாலும் பரவாயில்லை. ஆனால் செய்யும் போதும், படையலிடும் போதும் பக்தி தான்  முக்கியம். வீட்டில் இருப்பவர்களையோ, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையோ திட்டிக் கொண்டே சமையலில் ஈடுபடாமல், உங்கள் பிரார்த்தனை மனதுள் ஒலிக்கட்டும். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250கி

வெல்லம் - 300கி

பாசிப்பருப்பு - 50கி

ஏலக்காய் - 3

முந்திரி - 10

தேங்காய் - 1/2மூடி 

நெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் அரிசி, பருப்புகளை தனித்தனியே வாசம் வரும் வரை  மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது ஆறிய பின் மிக்சியில் ரவை பதத்தில் உடைத்து வைக்கவும். வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாக கொதி வந்ததும் அத்துடன்  உடைத்த அரிசி, பருப்பு ரவையைச் சேர்த்து கிளற வேண்டும்.

முக்கால் பதம் வெந்த உடன்  நெய், தேங்காய்த்துருவல் சேர்க்க வேண்டும்.

நன்றாக வெந்த உடன் முந்திரியை நெய்யில் வறுத்து  ஏலப்பொடி தூவி இறக்க வேண்டும். 
திருவாதிரை களி தயார்.

இப்போது திருவாதிரைக் களி தயாராகி விட்டது. அதே போல், ஆருத்திர தரிசனத்தன்று 7 கறி கூட்டுக் குழம்பு விசேஷமானது. அதன் செய்முறையையும் பார்க்கலாம் வாங்க. 

திருவாதிரை 7 கறி கூட்டுக்குழம்பு

தேவையானபொருட்கள்

திருவாதிரைக் களியை பச்சரிசி, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து செய்வது போல் இந்த தாளகக் குழம்பை நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்ய வேண்டும். இந்த காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் அமைவது கூடுதல் சிறப்பு. 

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய்,
பூசணிக்காய் என அனைத்து காய்கறிகளும் சேர்ந்து  - 300கி 
புளி- எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
வெல்லம்- சிறிதளவு 

வறுத்து அரைக்க 

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய்-1/4 மூடி 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை 

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1ஆர்க்கு 

செய்முறை

வெறும் வாணலியில் பச்சரிசி, எள் இவைகளை வாசம் வறும் வரை வறுக்க வேண்டும். இதன் பிறகு சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய், கடலைபருப்பு, தனியா, தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். பச்சரிசியையும், எள்ளையும் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.அனைத்து காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாயுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவேண்டும்.

பாதி வெந்து வந்த உடன் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.  காய்கள் நன்றாக வெந்ததும் அரைத்த விழுது மற்றும் வெல்லத்தினையும் சேர்த்துக் கொதிக்க  விடவேண்டும். கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.  திருவாதிரை தாளகக் குழம்பு தயார். திருவாதிரைக்களியுடன் இந்த7 கறி கூட்டுக்குழம்பும் சேர்த்துப் படையல் போட வேண்டியது தான். களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடலாம். சுவையும் அபாரமாக இருக்கும். 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.