உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்ஆருத்ரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுக்கு பின் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளிப்பர்.
பின்னர் சித்சபா மண்டபத்தில் பிரவேசம் செய்கின்றனர். பின்னர் முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சியுடன் திருவிழா இனிதே நிறைவடைகிறது. இந்த திருவிழாவை நேரில் காண உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பத்தில் குவிந்துள்ளனர். சம்போ மகாதேவா கோஷம் விண்ணை பிளந்தது.
!