மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்களின் தரம், கடந்த ஆண்டு வெவ்வேறு காலகட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட, காய்ச்சல் பாதிப்பு, தைராய்டு, இதய பாதிப்பு, கிருமி தொற்று, ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் சில தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதனால், அந்த, 23 மருந்துகளையும் கொள்முதல் செய்ய இரு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய, கடுமையான தர நிர்ணய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதன்படி, மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் மருந்துகள், முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுகின்றன.
அதன்பின், மருந்துகளின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, சீரற்ற முறையில் சில மருந்துகளின் மாதிரிகள் எடுத்து சோதிக்கப்படுகின்றன.
தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுதும் உள்ள முக்கிய ஆய்வகங்களுக்கு அந்த மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே, மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தரமற்ற மருந்துகளை வினியோகித்தால், முதற்கட்டமாக அந்த மருந்துகள் இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படும்.
தொடர்ந்து அத்தகைய நிலை இருந்தால், அந்த மருந்துகளை வினியோகம் செய்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும். அந்த வகையில், கடந்த ஆண்டு ஒன்பது நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.