பத்ம விருது பெற்றவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் மாதம் ரூ.30 ஆயிரம் நிதி; ஒடிசா மாநில அரசு அறிவிப்பு..!
Seithipunal Tamil January 17, 2025 01:48 PM

கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, சமூகப்பணி, பொது சேவை, மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1954ஆம் ஆண்டு முதல் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த விருதை இதுவரை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 105 பேர் பெற்றுள்ளனர். அதில் 90 பேர் பத்மஸ்ரீ விருதுகளையும், 11 பேர் பத்ம பூஷன் விருதுகளையும், நான்கு பேர் பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநில இலக்கியம் மற்றும் கலாசாரத்துறை அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, பத்ம விருது வாங்கியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த விருதை பெற்றவர்களுக்கு, இம்மாதம் முதல், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பத்ம விருது பெற்றவர்களின் விவரம், ஆட்சியர் வழங்கும் சான்றிதழ், வங்கிக்கணக்கு விவரம், ஐஎப்எஸ்சி விவரம் ஆகியவற்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போது ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள அரசு, பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால், இது அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய முதல்வர் மோகன் சரண் மஜி, இந்த நிதி ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்து,  தற்போது, இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.