விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மகாராஷ்டிரா தோற்கடித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதர்பா அணி..!
Seithipunal Tamil January 17, 2025 01:48 PM

32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் வதோதராவில் இன்று நடைபெற்றது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும் மோதின.

டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 03 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்தது.

இதில், யாஷ் ரதோட் 116 ரன்னும், துருவ் ஷோரே 114 ரன்னும் எடுத்தனர். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயர் 88 ரன்னும், ஜிதேஷ் சர்மா 51 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மகாராஸ்டிரா அணியில் அர்ஷின் குல்கர்னி 90 ரன்னும், அன்கிட் பாவ்னே 50 ரன்னும் எடுத்தனர். அத்துடன், நிகில் நாயக் 49 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வெற்றிக்கு முயன்றும், மகாராஷ்டிரா அணியால் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.