புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் திலோத்தமாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர் கோபத்தில் திலோத்தமா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
திலோத்தமாவின் தாய் தனது மகளை கண்டித்து கணவர் வீட்டிற்கு போகுமாறு கூறினார். ஆனால் திலோத்தமா திருச்சிக்கு சென்று ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கி 10 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்துள்ளார். கடந்த ஏழாம் தேதி திலோத்தமா தனது மகள் தர்ஷிகாவை ஒரு கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த முனியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திலோத்தம்மாவை பிடித்து விசாரித்த போது அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் திருச்சியில் விற்கப்பட்ட 10 மாத குழந்தையை மீட்டு ஒரு காப்பகத்தில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.