திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள், குப்பைகள் கொட்டி பாலாறு பாழாகி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடத்தை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தால், தூய்மைப் பணியாளர்கள் வந்து சாலை அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருக்கும் குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்திச் செல்வார்கள். ஆனால் இந்த இடத்தைக் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள்.
மறுபுறம் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சில நபர்கள் குப்பைகளை நெருப்பு மூட்டி எரிக்கின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, அந்தப் பகுதியில் புகை மூட்டம் உருவாவதால், வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால், அந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மீன்களுக்கும், பறவைகளுக்கும், பாலாற்றின் அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்" என்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "இங்கு அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பகல் - இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர் குப்பைகளை மூட்டை கட்டி அப்படியே வீசிச் செல்கிறார்கள். மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள் சில நேரங்களில் இறந்துபோன விலங்குகளைக்கூட இங்கே வீசுகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாள்களாக இந்த இடத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மேலும் அருகாமையில் இருக்கும் சில பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமலேயே நேரடியாக இந்தப் பாலாற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. எங்களுடைய விவசாய நிலங்கள் எல்லாம் வீணாய் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சூழல் இருந்தால் நாங்கள் எப்படி இங்குப் பிழைப்பு நடத்துவது.
பாலாறு நாங்கள் வணங்கும் குல தெய்வம் போல். இங்கிருந்து தான் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எங்களுக்கு எதாவது நோய் வந்தால் அரசாங்கம் தான் பொறுப்பு. நாங்களும் துப்பரவு பணியாளர்களிடம் பல முறை கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அலட்சியத்தை மட்டுமே காட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இப்படியே தொடர்ந்தால், பெரும் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும்" என்று வேதனையுடன் கூறினார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து பாலாற்றை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.