ஆட்டோ எக்ஸ்போ 2025 - வழக்கமான ஆட்டோ எக்ஸ்போவாக இல்லாமல் இந்த ஆண்டு முழுவீச்சுடன் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவாக நடைபெற்றது.
இந்த பாரத் மொபிலிட்டி ஷோவின் ஓர் அங்கமாக ஆட்டோ எக்ஸ்போ மட்டும் இல்லாது, காம்பொனென்ட்ஸ் ஷோ (உதிரிபாகங்கள்), டயர் ஷோ, சைக்கிள் ஷோ, பேட்டரி ஷோ, ஸ்டீல் ஷோ, மொபிலிட்டி டெக் பெவிலியன் ஆகியவையும் இடம் பெற்றிருந்ததால், இதை ஒரு 360 டிகிரி ஆட்டோமொபைல் ஷோ என்று குறிப்பிடும் அளவுக்கு முழுமையானதாக அமைந்திருந்தது.
உள்நாட்டுக் கம்பெனிகள், வெளிநாட்டுக் கம்பெனிகள், கார் பைக் கம்பெனிகள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் என்று ஒட்டுமொத்தமாக பாரத் மொபிலிட்டி ஷோவில் 1,500 கம்பெனிகள் கலந்து கொண்டு இதன் பிரமாண்டத்தைக் கூட்டின.
ஒரு சில ஷோக்கள் நொய்டாவிலும் துவராகாவிலும் நடைபெற்றாலும், முக்கியமான ஆட்டோ எக்ஸ்போ டெல்லியின் மையப்பகுதியில் இருக்கும் பாரத் மண்டபத்தில் (பிரஹதி மைதான்) ஜனவரி 17 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்று, கார் மற்றும் பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆறு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்ற பாரத் மண்டபத்தில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். மொத்தம் 90 புது வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பெரும்பான்மையான வாகனங்கள் மின்சார வாகனங்களாக அமைந்திருந்ததுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது இந்தியா, மின்சார வாகனங்களை நோக்கி எவ்வளவு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கண்காட்சி உரத்த குரலில் எடுத்துச் சொன்னது.
அதேபோல உதிரிபாகங்களைப் பொருத்தவரை புத்தம் புதிய 97 உதிரிபாகங்கள் அறிமுகமாகின. பேட்டரி ஷோ 21 புது அறிமுகங்களைக் கண்டது.
ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டார் விகடன் அரங்குக்கும் உங்களில் பலர் வந்திருந்து எங்களை உற்சாகப்படுத்தினீர்கள். அனைவருக்கும் நன்றி!
- ஆசிரியர்