கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சிக்கிய பலே கொள்ளையன்
Vikatan February 05, 2025 07:48 PM

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டம்விட்டு பூட்டை உடைத்து திருடிய நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தேனீர் கடை நடத்தி வந்த பஞ்சாக்ஷரி சங்கய்ய சுவாமி(37) என்ற அந்த நபர் தனது கூட்டாளியுடன் இணைந்து மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை பூர்வீகமாக கொண்ட சங்கய்ய சுவாமி பெங்களூருவில் வீட்டை உடைத்து திருடியதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 180 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சங்கய்யா சுவாமியிடம் விசாரித்தபோது ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் தனது கூட்டாளியுடன் இணைந்து வீடுகளில் பூட்டை உடைத்து திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது வரை 200 வீடுகளில் திருடி இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளான். திருடிய பொருட்களில் பெரும்பகுதி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவனது கூட்டாளியிடம் இருக்கிறது. அவனை தேடி வருகிறோம். 100 திருட்டு தொடர்பாக மும்பை போலீஸார் பல முறை சங்கய்யாவை கைது செய்திருக்கின்றனர். திருடிய பொருட்களில் இருந்து தனது கொல்கத்தா காதலிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

அவனது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் ஏராளமான புகைப்படங்கள் இருந்தது. அவை நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போராடும் நடிகைகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. திருட்டு பணத்தில் அந்த நடிகைகளை மும்பை ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று நெருக்கமாக இருந்துள்ளான். குஜராத் போலீஸார் திருட்டு தொடர்பாக சங்கய்யா சுவாமியை 2016ம் ஆண்டு கைது செய்தனர். இவ்வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை போலீஸார் அவனை கைது செய்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையாகிவிட்டான். அதன் பிறகுதான் பெங்களூர்வில் கடந்த மாதம் 400 கிராம் தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டான். கைது செய்யப்பட்ட அவனிடமிருந்து 180 கிராம் தங்கம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவனுடன் சேர்ந்து திருடிய அவனது கூட்டாளியிடம் எஞ்சிய தங்க நகைகள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.