சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் திடீர் நீக்கம்.. மீண்டும் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..!
Webdunia Tamil February 05, 2025 07:48 PM


சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது திடீரென மூன்று ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ள நிலையில், இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக அரசு இதில் தலையிட்டு இரு தரப்பினருடனும் பேசி, வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ், சிவனேசன், குணசேகரன் ஆகிய மூவரையும் சாம்சங் நிர்வாகம் திடீரென தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.