திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்..!
Top Tamil News February 08, 2025 01:48 PM

கோவை மாநகராட்சி மன்ற கவுன்சிலர் கூட்டம் டவுன்ஹாலில் உள்ள பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். ஆணையர் சிவகுரு பிரபாகரன் , துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் கலந்து கொண்டார்.

கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக கவுன்சிலர்கள் மூவரும் மாநகராட்சியின் டிரோன் மூலம் வரி ஆய்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சியினரான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கமிஷனர் 15-க்கு மேற்பட்டோர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், ட்ரோன் மூலம் சொத்துவரி அளவிடும் பணியை கைவிட வேண்டும், தொழில் நிறுவனங்களுக்கு வரிவிதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்த அவர்கள் கூட்ட அரங்கம் முன்பு, படியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அங்கிருந்து காந்தி சிலை முன் சபதம் ஏற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே மன்ற கூட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினர் கணபதி பா.ராஜ்குமார் பேசுகையில், “கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் நான் உள்ளிட்டோர் சென்று மெட்ரோ ரயில் அதிகாரியை சந்தித்து பேசி உள்ளோம். நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ளது. எம்.பி.க்கள் அவர்களது மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 6 எம்.எல்.ஏ தொகுதிகளில் கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ட்ரோன் மூலம் அளவீடு செய்யும் பணி பேசு பொருளாகியுள்ளது. அதில் தொகை அதிகமாக வருகிறது என்று கூறப்படுகிறது. பில் கலெக்டர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் பில் கலெக்டர்களை கூண்டோடு மாற்ற வேண்டிய மாற்ற வேண்டிய சூழல் வரும். மாநகரில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை செய்யும் பணியை முறையாக மேற்கொண்டு விரைவாக முடிக்க வேண்டும். சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதுதொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் நெருங்க உள்ளதால் சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.