தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அண்ணா மற்றும் எம்ஜிஆர் போன்று தான் போட்டியிடும் முதல் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று விஜய் கூறினார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன் என்று விஜய் கூறிய நிலையில் இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் விஜயை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் இளைஞர்களை வெறும் சினிமா புகழை வைத்து ஏமாற்றி விட முடியாது. தேர்தல் சமயத்தில் விஜய் போன்று புதிதாக ஏராளமானோர் வந்தாலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுகவை தாண்டி விசிக போன்ற ஜனநாயக சக்திகளை அவ்வளவு சீக்கிரம் ஓரம் கட்டி விட முடியாது.
விஜய் முதலில் தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவரை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தெரியவரும். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் வேறு எந்த கட்சிக்கு பின்னடைவு வரும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாததால் அதிமுக மற்றும் திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் மிகவும் விவரமானவர்கள். இளைய தலைமுறையினரும் அரசியல் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் தமிழ்நாட்டின் இளைஞர்களை ஏமாற்றி விட முடியாது. மேலும் தேர்தல் தான் இதற்கான முடிவுகளை சொல்லும் என்று கூறினார்.