பாசிசம் பயங்கரமானது; படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது; உடல் நலத்திற்கு நல்லது. என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்ச்சித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தனது கட்சியான த.வெ.க.,வை தயார் படுத்தி வருகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில், த.வெ.க., 02-ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியபோது, மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது பேச்சை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ., அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது; படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது; உடல் நலத்திற்கு நல்லது.'' என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.,வின் முதல் மாநாட்டில், விஜய் அவர்கள் 'பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா' என்று கூறி, தி.மு.க.,வை தாக்கி பேசியிருந்தார். இன்றைய பேச்சிலும், 'பாயாசம்' என்று குறிப்பிட்டு கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் செயலாளர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.