தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரபு தேவா நடனம் மற்றும் நடிப்பிலும் சாதனை புரிந்து தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரவுடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியின் மேடையில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் பிரபு தேவா தனது எக்ஸ் தல பக்கத்தில், "எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன்.
முதல் முறையாக இந்த மேடையில் நாங்கள் இதை பகிர்ந்துள்ளோம். இது நடனத்தையும் தாண்டிய ஒன்றாகும். மரபு, பேரார்வம் மற்றும் பயணம் தற்போது தொடங்கியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.