சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 317 ரன்கள் மேட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 120 ரன்கள் அடித்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராஹிம் ஜத்ரான், இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இவர்தான் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். மேலும், பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.