பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநில அரசின் இந்த உத்தரவு பஞ்சாபி மொழியைப் பாதுகாக்கவும், மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியின் மீது பற்று ஏற்படவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் தமிழ் தமிழ் என்று மூச்சு முட்ட கத்திக்கொண்டு இருக்கும் நம் தமிழகத்தில் இன்று வரை தமிழ் மொழி கட்டாய பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால் தொடக்கக்கல்வி தொடங்கி எங்குமே தமிழ் படிக்காமலேயே தமிழகத்தில் பட்டம் பெற முடியும் அதுவும் தமிழக அரசு நடத்தும் பள்ளி, கல்லூரியில் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
இதைவிட ஒரு பெரும் கொடுமை உள்ளது. தமிழக அரசின் அரசாணை ஆங்கிலத்தில் தான் வெளியாகும். பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்படும். தற்போது பல அரசாணைகள் தமிழில் மொழி பெயர்ப்பை செய்வது கூட இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் அலுவல் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். இடையில் தமிழை கட்டாயமாக அரசு முயற்சி மேற்கொண்ட போது, மொழி சிறுபான்மையினர் (தெலுங்கும், உருது etc) கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.