10 ஆண்டுகளில் ரூ.400 கோடி; வழக்குகளுக்கு மட்டும் செலவழிப்பு; மத்திய அரசு ..!
Seithipunal Tamil February 27, 2025 11:48 AM

கடந்த 10 ஆண்டுகளில், ரூ.400 கோடியை, மத்திய அரசு வழக்குகளுக்கு மட்டும் செலவழித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ' கோவிட் காலங்களை தவிர்த்து, 2014 -15-ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரையில் வழக்குகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது,' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரையில் மொத்தம் ரூ.409 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும்,  2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.26.64 கோடியும், 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.37.43 கோடியும் செலவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக, 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.9 கோடி அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், 'மத்திய அரசுக்கு எதிராக மொத்தம் 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அதில், 1.9 லட்சம் வழக்குகள் நிதியமைச்சகம் தொடர்புடையது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்க்கும் வகையில் தேசிய வழக்கு கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதன் இறுதி வரைவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.