நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள் என்ற விவரம் தேவையில்லை, உங்களுடைய கவர்ச்சிகரமான ரெஸ்யூம் எங்களுக்கு தேவையில்லை, வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த உள்ளோம் என்று பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மாலஸ்ட் ஏஐ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் காமத், தனது எக்ஸ் பக்கத்தில், திறமையான ஏ.ஐ பொறியாளரை வேலைக்கு அமர்த்த விரும்புவதாக அறிவித்துள்ளார். “உங்களை பற்றி 100 வார்த்தைகளுக்குள் ஒரு சிறிய உரை எழுதி அனுப்பினால் போதும். நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள் என்ற விவரம் எங்களுக்கு தேவையில்லை. உங்கள் ரெஸ்யூமும் எங்களுக்கு தேவையில்லை. உங்கள் உரை எங்களுக்கு பிடித்திருந்தால் உடனே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். நேர்முகத் தேர்வில் உங்களுடைய பதில் திருப்திகரமாக இருந்தால் உடனே வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள், எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தீர்கள் என்பதெல்லாம் எங்களுக்கு அவசியம் இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது உங்கள் திறமையே. நீங்கள் அதை நிரூபித்தால் உடனே வேலைக்கு சேர்த்துக்கொள்வோம். சம்பளம் வருடத்திற்கு 40 லட்சம் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், அந்த பதிவு 3.5 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், ஏராளமானோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கமெண்டுகளில் பதிவிட்டுள்ளனர்.