உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்போர் பெரும்பாலும் செய்வது நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும். அரை மணி நேரம் ஏதோ கடமைக்கு நடந்துவிட்டு உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுவோர் எண்ணிக்கைதான் இங்கு அதிகம்.
இன்னும் சிலரோ, காலை உணவைத் தவிர்த்துவிட்டு, வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டிருப்பார்கள். இதனால், உடலில் சத்துக் குறைபாடு ஏற்படுவதுதான் மிச்சம். உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்... வெறும் நடைப்பயிற்சி மட்டும் செய்தால் போதுமா? விளக்குகிறார் டாக்டர் கிருஷ்ணம்மாள்.
''உடல் எடை குறித்த அக்கறை பெரும்பாலும் இல்லை. சிலருக்கு விளம்பரங்களைப் பார்த்து கொஞ்சம் வந்திருக்கிறது. இன்னும் சிலருக்கோ, சர்க்கரை நோய், மூட்டுவலி போன்று வேறு பிரச்னை ஏதேனும் வந்த பிறகுதான் உடல் எடை பற்றிய கவலையே வருகிறது. அதிலும் 'உடனே உடல் எடை குறைய வேண்டும், அதுக்கு என்ன செய்யணும்' என்று கேட்பார்கள். இன்னும் சிலர், ''எனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம். அதற்குள் உடல் எடை குறைந்துவிட வேண்டும்'' என்று வந்து நிற்பார்கள்.
'மூன்று மாதங்கள் தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் உடல் எடை குறைந்துவிடும்’ என்று வரும் விளம்பரங்களை நம்பி, வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. வெயிட் மேனேஜ்மென்ட் என்பது உடலில் இருக்கும் எனர்ஜியை பேலன்ஸ் செய்வதுதான். அதை விடுத்து முழுவதும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது தவறு. ஒவ்வொரு உடல்நிலைக்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் தேவைப்படும். சிலருக்கு ஹார்மோன் பிரச்னைகளும் இருக்கலாம். அதைச் சரியாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி தான் உணவுமுறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
இது போலியான வழி!உடலின் பெரும்பாலான பகுதி நீர் என்பதால், பலர் எடையைக் குறைக்க நீரை வெளியேற்றுகிறார்கள். இது முற்றிலும் போலியான மற்றும் தீமையான உத்தி. முற்றிலும் நீர் இன்றி வாழ்வது ஆரோக்கியமானது அல்ல. மயக்கம் அடைதல், தலைசுற்றல், சோர்வு, இதயப் படபடப்பு போன்ற மோசமான பிரச்னைகளுக்கு இது வழிவகுக்கும். சில சமயங்களில், இது தசைப் பழுது மற்றும் மரணத்துக்குக்கூட வழிவகுக்கும்.
உணவுமுறைகளை எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாண்டாலும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். எப்படி வாக்கிங் போக வேண்டும் என்று தெரியாமல் நடப்பவர்கள் ஒருவிதம் என்றால், நடையோ நடை என்று நடந்து உடலைக் கெடுத்துக்கொள்பவர்கள் இன்னொரு விதம். எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் செய்வது முற்றிலும் தவறானது. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது உடல் எடையைக் குறைக்க உதவாது. வியர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடைக் குறைவே. இதை விடுத்து உடல் தசைகளுக்குக் கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாகப் பயிற்சி கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
உடற்பயிற்சிக்கும் அளவுண்டு!உடற்பயிற்சி என்பது குறைந்தது 20 நிமிடங்களாவது செய்ய வேண்டும். செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். குறைந்தது 20 நிமிடங்களாவது இந்தத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால்தான் நமது உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். உடற்பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டோம் என்று பொருள். அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியானது நம் தூக்கத்தைக் கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகச் செய்வது அவசியம்.
பலரும் நடைப்பயிற்சி போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் எடை குறைந்தபாடு இருக்காது. நம் மூளை எந்த ஒரு விஷயத்தையும் குறைந்தது 15 நாட்களுக்குள் பழகிவிடும். உடல் ஒரு மாதத்தில் பழகிவிடும். வருடக்கணக்கில் ஒரே வேகத்தில் ஒரே அளவிலான தூரத்தில் சென்றுகொண்டிருந்தால் மூளையும் உடலும் அதற்கு ஏற்றாற்போல் பழகிவிடும். இதனால், ஆரம்பத்தில் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் மெலிவதுபோல தெரியும். ஒரு கட்டத்துக்கு மேல் இதனால் பலன் இல்லாமல் போய்விடும். எனவே, நடைப்பயிற்சி செய்யும் போது ஒவ்வொரு மாதமும் தூரத்தைக் கூட்ட வேண்டும். அதே போல வேகத்தையும் கூட்ட வேண்டும். செல்லும் திசைகளையும் மாற்றினால் நல்லது. ஆரம்பித்த உடனேயே நான்கு, ஐந்து கிலோமீட்டர் என்று செல்லக்கூடாது. முடிந்த அளவு தூரம் சென்று பின்னர் நாளடைவில் நடக்கும் வேகத்தையும் தூரத்தையும் கூட்ட வேண்டும். சிலர் நடைப்பயிற்சி சென்று வந்தவுடனே சோர்வாக இருக்கிறது என்று சொல்லி ஒரு கப் டீயோ அல்லது காபியோ குடிப்பார்கள். அப்படி செய்தால் அவ்வளவு தூரம் வாக்கிங் போனதே வீணாகிவிடும். அதனுடன் கூடுதல் கலோரிகள் சேர்ந்துவிடும்.
இந்த உடல்பருமன் என்பது ஸ்லோ பாய்ஸன். இது வந்தால் புற்று நோய், ரத்தத்தில் கொலஸ்ட்ரால், பித்தப்பைக் கல், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய்கள், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பழுதடைதல், எலும்பு தேய்மானம், தோல் வியாதிகள், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்று 60-க்கும் மேற்பட்ட நோய்கள் வரக் காரணமாகிவிடும். அதனால் உடல் எடை குறித்தும் அதை சரியான அளவில் வைத்துக் கொள்வதற்கும் மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்'' என்கிறார் டாக்டர் கிருஷ்ணம்மாள்.
Click here: