ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ரஹிம் ஸத்ரான், ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தின் பென் டக்கெட் அதிகபட்சமாக 166 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அதனை முறியடித்து பென் டக்கெட்டை பின்னுக்கு தள்ளி ஸத்ரான் 177 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் எடுத்த நிலையில், சேசிங்கில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற வீரர் இப்ராஹிம் ஸத்ரான் நேற்றைய போட்டியின் சிறந்த ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.
இப்ராஹிம் ஸத்ரான்ஆப்கானிஸ்தான் அணியின் வலது கை பேட்ஸ்மேனான இப்ராஹிம் ஸத்ரான் டிசம்பர் 12, 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் என்ற இடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே காபூலில் உள்ள ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார் இப்ராஹிம் ஸத்ரான். கிரிக்கெட் மீதான அவருடைய ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர்கள் சிலர், அவரை கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட வைத்தனர். 2017 ஆம் ஆண்டில் காஸி அமானுல்லாகான் ரீஜினல் ஒரு நாள் தொடரில் வலது கை பேட்ஸ்மனாக அறிமுகமானார் இப்ராஹிம் சத்ரான்.
2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் நாங்கர்ஆர் அணிக்காக விளையாடினார்.
2017 ஆம் ஆண்டிலேயே 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை தொடரில் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் இப்ராஹிம் ஸத்ரான். தனது அற்புதமான பேட்டிங் திறமையால் தரவரிசையில் உயர்ந்து கொண்டே வந்தார். 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் சீனியர் அணியில் இடம் பெற்றார். 2022 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தனது முதல் சென்சுரியை 120 ரன்களில் எடுத்தார். 2022 நவம்பரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 106 ரன்கள் எடுத்தார். இந்த போட்டி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இலங்கைக்கு எதிரான அதே தொடரில் மூன்றாவது போட்டியில் 162 ரன்களுடன் தனது நாட்டிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தன் பெயரை எட்டா மைல் கல்லில் பதித்தார். அவர் அந்த தொடரை 278 ரன்களுடன் அந்த தொடரின் நாயகன் என்று தனது விளையாட்டிற்கென தனி இடத்தை தன் திறைமை மூலம் பெற்றார். பின்னர் 2023 இலங்கையின் அம்பாங்தோட்டை ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் 98 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு இந்தியாவில் 2023 ல் நடந்த ஐசிசி உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடந்த 2023 ஐசிசி உலக கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றியின் பாதையில் அழைத்து சென்றார். இந்த போட்டியில் அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தான் பெற்ற இந்த விருதை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன் என கூறினார். 2023 ஐசிசி உலக கோப்பை மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நவம்பரில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 147 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதுவே உலககோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் எடுத்த முதல் செஞ்சுரி ஆகும்.
ஆண்களுக்கான ஐசிசி t20 தொடரில் இவர் 2024 ஆம் ஆண்டின் ஆப்கானிஸ்தான் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தற்போது நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த நேற்றைய போட்டியில் 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்து, சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இதுவரை எடுத்த ரன்களிலேயே ஒரு தனி நபரால் அதிக ரன்கள் எடுக்கப்பட்டவர் இப்ராஹிம் எனும் வரலாற்றுப் பெருமையைப்பெற்றார். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து இந்த முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி இப்ராஹிம் 177 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர்களில்...
177 ரன்கள்- இப்ராஹிம் (ஆப்கானிஸ்தான்-2025)
165 ரன்கள்- பென் டக்கெட்(இங்கிலாந்து-2025)
145 ரன்கள்- நாதன் அஸ்லே(நியூசிலாந்து-2004)
145 ரன்கள்-ஆண்டிப் ப்ளவர்(ஜிம்பாப்வே-2002)
141 ரன்கள்-சௌரவ் கங்குலி(இந்தியா-2000)