செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை நிலவரம் தொடர்பான அறிக்கையை சென்னை சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோருக்கான கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி, சீல் வைக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை சென்னை எம்பி / எம்எல்ஏ நீதிமன்ற நீதிபதி சீலிடப்பட்ட அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27ஆம் தேதி (27/01/2025) உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சென்னை நீதிமன்ற சிறப்பு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய திமுக அரசில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் அளிக்கப்பட்டன. மொத்தம் 3 வழக்குகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்ட ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.