நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியவை சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பெரியார் குறித்த சீமானின் பேச்சு பிடிக்காமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து தர்மபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான் நாளை தர்மபுரி செல்ல இருக்கும் நிலையில் தர்மபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து அண்ணாதுரை “நாம் தமிழர் உறவுகளுக்கு தர்மபுரி மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை வணக்கமுடன் தெரிவித்துக் கொள்வது. நமது தமிழினம் உலகெங்கிலும் பல்வேறு சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு இருந்தபோது நமது தேசிய தலைவர் உலகத்தில் எந்த தலைவரும் செய்யாத தியாகத்தை செய்து மூன்று தலைமுறைகளை போர்க்களத்தில் பலியிட்டு ஈழதமிழினம் அளிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் சீமான் அவர்களால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய இயக்கம் தமிழர் நலனை காக்கவும் இயற்கை வளங்களை காக்கவும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டது. எந்தவித விறுப்பு வெறுப்பும் இல்லாமல் எதார்த்தமான முறையில் இந்த சங்கதிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கீழ்க்கண்ட காரணங்களுக்காக நான் நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை நான் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.