உடை மாற்றும் அறையில் ஆளுநர்... வெடித்த ஜெனரேட்டர்! சூழ்ந்த புகையால் அதிர்ச்சி
Top Tamil News February 28, 2025 03:48 AM

இரண்டு நாள் பயணமாக பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். 

சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து இறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சாலை மார்க்கமாக காரில் திருச்செந்தூர் வருகை தந்தார். திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில் வருகின்ற மார்ச் 4-ஆம் தேதியன்று 193 வது அவதார தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். சுவாமி தரிசனம் செய்வதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். 

கோவில் அருகே உள்ள அறையில் உடை  மாற்றுவதற்காக ஆளுநர் உள்ளே சென்றார். அந்த சமயத்தில் ஆளுநர் தங்கி இருந்த அறைக்கு அருகே இருந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் புகை கிளம்பியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் மெயின் சுவிட்சை அணைத்தனர். இதற்கிடையில் வெளியே வந்த ஆளுநர் கோவில் முன்புள்ள கடல் நீரில் தீர்த்தம் எடுத்து கொண்டார். அதன் பின் ஆளுநர் அய்யா வைகுண்டர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்குள் 5 முறை சுற்றி சுவாமி தரிசனம் செய்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகிகள் அய்யா வைகுண்டரின் புகைப்படத்தையும் விளக்கையும் வழங்கி கௌரவித்தனர். 

அதை தொடர்ந்து வெளியே வந்த ஆளுநருடன் கோவில் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தமிழக ஆளுநர் வருகையே முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தரிசனம் முடித்த ஆளுநர் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருநெல்வேலி கிளம்பி சென்றார். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை ஆளுநர் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.