இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி சார்பில் புளியந்தோப்பு, மோதிலால் தெரு மற்றும் சூளை, தட்டான்குளம், நல்லமுத்து தெருவில் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டார். இது குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாட்டில் சிவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதிலும் எங்காவது பிரச்சனைகளை உருவாக்கலாம் என சங்கிகள் நினைத்தார்கள், நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 9 திருக்கோவில்களில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருங்காலங்களில் இன்னும் சில கோவில்களில் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படும்.
தமிழ்நாடு வரும்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகளை உருவாக்கி மக்களை திசை திருப்ப பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை விரும்புவேன் என்பார், உத்தரப்பிரதேசம் சென்றால் இந்தியை விரும்புவேன் என்பார்... இது போன்ற இரட்டை நாக்கை கொண்டோர் பேச்சுக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்காக புதிய, புதிய பிரச்சனைகளை முதலமைச்சர் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
முதல்வரும் துணை முதல்வரும் உறவுக்கு கை கொடுப்பவர்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள். அதிலிருந்து என்னாலும் பின் வாங்க மாட்டார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மக்களைப் பிளவு படுத்துகின்ற சூழல் வரும்பொழுது இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடியவர் தமிழ்நாட்டு முதல்வர், திமுக தேசவிரோத ஆட்சி இல்லை தேசிய ஆட்சி.LKG, UKG பிள்ளைகள் போல மத்திய, மாநில அரசுகள் சண்டையிடுவதாக விஜய் விமர்சிக்கிறார். அரசியலில் திமுக பல PhD-களை முடித்த கட்சி என்பதை விஜய்க்கு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்