சென்னை அசோக் பில்லர் பகுதியில் இயங்கி வந்த உதயம் தியேட்டர் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற திரையரங்கமான ஸ்ரீ பிருந்தா தியேட்டர் அதன் ஓட்டத்தை நிறுத்தி உள்ளது.
வடசென்னை மக்களுக்காக கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை திரையிட்டு வந்தது. வட சென்னையில் திறக்கப்பட்ட முதல் ஏசி தியேட்டர் இதுவாகும். இந்த தியேட்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் திறந்து வைத்தாராம். இந்த தியேட்டரை பிருந்தா திரையரங்கம் என அழைப்பதைவிட ரஜினி தியேட்டர் என்று தான் அழைப்பார்களாம்.இந்த தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடி இருக்கிறது. இதுதவிர ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவிழா கண்டுள்ளன.
உதய கீதம் படத்தின் மூலம் கடந்த 1985-ம் ஆண்டு முதல் இயங்க தொடங்கிய இந்த தியேட்டரில் கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த தியேட்டரில் கடைசி காட்சி திரையிடப்பட்டது.