இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 25ஆம் தேதி ராஜிவ் சாக் மெட்ரோ நிலையத்தில் ஒரு நபருடன் நின்று கொண்டிருந்த குழந்தையை அங்கு வந்த 2 நபர்கள் கடத்திச் செல்வது போல வீடியோ ஒன்று வைரலானது.
இது தொடர்பாக காவல் துறையினர் மெட்ரோ நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மெட்ரோ நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இது திட்டமிட்ட பிராங்க் வீடியோ என்பது தெரிய வந்தது. பின்னர் இந்த வீடியோவில் காணப்பட்ட சூரஜ், பங்கஜ் ,ஷஹீர், அபிஷேக் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002ன் பிரிவு 59 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
மெட்ரோ நிலையம் போன்ற முக்கியமான பொது தளங்களில் இவ்வாறு போலியான சம்பவங்களை உருவாக்குவது கண்டிக்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. மேலும் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை கவரும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்