உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட இந்திய விமானப்படையின் சென்ட்ரல் ஏர் கமாண்டு தலைமையகத்தில், முக்கிய பொறியாளராக பணியாற்றிய எஸ்.என். மிஸ்ரா கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக சௌரப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டிற்குள் கும்பல் திருடராக நுழைந்ததாகவும், அடையாளம் தெரிந்துவிடும் என்ற பயத்தில் சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் கூறினர்.
மிஸ்ராவின் குடும்பத்தினர், இது திருட்டுக்காக செய்யப்பட்ட கொலை என்ற போலீஸ் கூறுவதை கடுமையாக மறுத்துள்ளனர். வக்கீல் சௌரப் பிரதாப் சிங் கூறியதாவது, “இது ஒரு திட்டமிட்ட கொலை. ஒரு திருடன் இரவு 3 மணிக்கு பெல் அடிப்பானா?” என கேள்வி எழுப்பினார். மேலும், குரல் ஒலிக்காத நிசப்த துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பதால் உள்ளே யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, மார்ச் 14ஆம் தேதி, குற்றவாளி மிஸ்ராவின் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும், அவர் ஏற்கனவே விமானப்படை மற்றும் காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌரப் குமார் மற்றும் அவரது பெற்றோர் அங்குள்ள பல வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், மேலும் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அவரது சகோதரனின் ஜாமினுக்காக பணம் தேவைப்பட்டதால் இந்த திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், “ஆடம்பர வாகனங்கள், செல்போன், துப்பாக்கி வைத்திருப்பவர் திருட வேண்டிய அவசியம்?” என வக்கீல் கேள்வி எழுப்பி, கான்ட்ராக்டர்கள் தொடர்பான முன்கோபத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குற்றவாளிக்கு ரூ.10–15 லட்சம் கொடுத்து கொலை செய்ய வைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.