பீஹார் மாநிலம் பட்டணா நகரத்தின் அகம்குவான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சிறிய பஹாடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கிருந்த விகாஸ் குமார் மாஹ்தோ (வயது 25) என்ற இளைஞர், இணையவழி PUBG என்ற மொபைல் விளையாட்டுக்கு கடுமையாக அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இவர், பட்டணாவில் கூலித் தொழிலாளராக வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர் வேலைகளையும், குடும்ப பொறுப்புகளையும் தவிர்த்து முழுமையாக மொபைல் விளையாட்டில் மூழ்கியிருந்ததாக குடும்பத்தினரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
விகாஸ் மனைவி மணிதா தெரிவித்ததாவது, அவர் வேலைக்கு செல்லும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு, PUBG விளையாட்டின் வாயிலாக சம்பாதிக்கவே குடும்ப செலவுகளை நடத்தி வந்தார். அதிகமான நேரம் விளையாட்டு மற்றும் அதற்காக பணம் செலவழிப்பதையே காரணமாகக் கொண்டு இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன.
ஒவ்வொரு முறையும் தற்கொலைக்கு முயல்வதாக மிரட்டும் பழக்கம் இருந்ததாகவும் கூறினார். சம்பவத்தன்று சைதி சட்க் திருநாளை முன்னிட்டு, மணிதா தன் மாமியாரை சந்திக்க வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் விகாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன், சடலத்தை நலந்தா மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இருந்த உறவினர்கள் செய்தி அறிந்ததும் பட்டணாவுக்கு வந்துள்ளனர். விகாஸ் மற்றும் மணிதா காதல் திருமணம் செய்தவர்கள் என உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நீரஜ் பாண்டே கூறும்போது, முதற்கட்ட விசாரணைகளில், இணையவழி விளையாட்டு பழக்கமே இந்த தற்கொலையின் முக்கிய காரணமாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதற்கான மனநல தாக்கங்களையும் பொருத்து விசாரணை பல கோணங்களில் தொடரப்படுகின்றது.