குழந்தைகள் உட்பட 18 பேர் பலி... உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா!
Dinamaalai April 06, 2025 04:48 PM

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரம் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள விளையாட்டு மைதானம், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.