ஒவ்வொரு முறை நீங்கள் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்கும் போதும் அதில் பல பாக்டீரியாக்களை விட்டு செல்கிறீர்கள். நாள் முழுவதும் அது இன்னும் லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
மீண்டும்மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் எந்த அளவில் சுகாதாரமாக இருக்கின்றன என்பது குறித்து கார்ல் பெஹன்கே எப்பொழுதுமே சிந்தித்து வந்துள்ளார். ஒருமுறை பாட்டிலில் பேப்பர் டவலை நிரப்பிய அவர் சிறிது நேரம் கழித்து அதில் படலம் ஒன்று படிந்திருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார்.
"நான் டவலை வெளியே எடுத்தவுடன் அது வெள்ளை நிறத்தில் தான் இருந்தது, அந்த துணியில் நான் உணர்ந்த வழவழப்பு அதில் வளர்ந்திருந்த பாக்டீரியாவால் உருவாகியிருந்தது," என்று இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் உணவுத் துறை பாதுகாப்பு நிபுணரான கார்ல் பெஹன்கே தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்ட அவர், தனது குழுவினருடன் இணைந்து அந்த பல்கலை க்கழகத்தில் எதார்த்தமாக சென்றுகொண்டிருந்த அனைவரிடமும் அவர்களது தண்ணீர் பாட்டிலை கடனாக பெற்றுக்கொண்டார்.
"ஆய்வு முடிவை தெரிந்துகொள்ள விருப்பம் காட்டாத மக்கள் அதிகளவில் இருந்தது தான் இதில் முக்கிய பகுதியாக இருந்தது. அதாவது பெரும்பாலானோருக்கு அதன் விடை தெரிந்திருந்தது. ஏனெனில் பலரிடம் அதை சுத்தம் செய்யும் பழக்கம் குறைவாகவோ அல்லது அவை சுத்தம் செய்யப்படாமலோ இருந்தன. இதே போன்ற ஒரு முடிவை தான் ஆராய்ச்சியும் வெளிப்படுத்தியது," என்கிறார் பெஹன்கே.
2024 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட பாட்டில்களின் சந்தை மதிப்பீடு 10 பில்லியன் டாலராக இருந்தது. இத்தாலியில் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாதி பேர் இது மாதிரியான பாட்டில்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அதேசமயம் பல்கலைக் கழக மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50-இல் இருந்து 81 சதவீதத்தினர் பாட்டில்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது,
நமது உடலில் உள்ள நீர் சத்தை மேம்படுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் என்றாலும், நாம் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்வதில் ஆரோக்கியம் சார்ந்த சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்போது பாட்டில்கள் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தான் இதற்கு இருக்கும் தீர்வா அல்லது இதிலிருந்து தப்பிக்க வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை வீடியோவில் காண்போம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.