'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி
Vikatan April 20, 2025 10:48 AM

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வின் பெயரால் திமுக அரசு மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ - மாணவிகள் உயிரிழந்தார்கள்.

வேலுமணி

மக்களை ஏமாற்றுவதற்கு திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருக்கும்போது, திமுகவின் காந்திராஜன் கல்வி அமைச்சராக இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

மக்களை ஏமாற்ற முடியாது

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை மிகவும்  இழிவாக பேசியதற்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வை காண்பித்து மத்திய அரசு மீது பழியைபோட்டு, திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் 7.5% சதவிகிதம் மருத்துவ இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

 நீட் ரகசியம்?

தமிழகத்தில் திமுக நீட் ரகசியம் இருப்பதாக சொல்லி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது இருப்பது தேர்தலுக்கான கூட்டணி. வக்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளோம்.

வக்பு வாரியம்

சட்டமன்றத்தில் கொண்டு வந்த வக்புக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 200  தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.