Doctor Vikatan: ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் வந்தாலே எனக்கு கடுமையான நீர்க்கடுப்பு பிரச்னை வந்துவிடும். மருத்துவரைப் பார்த்து ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டால்தான் மெதுவாக குணமாகும். அதிக அளவிலான ஆன்டிபயாட்டிக் எடுக்கவும் பயமாக உள்ளது. இந்தப் பிரச்னையை இயற்கையான முறையில் குணப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லவும்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
நிறைய தண்ணீர் குடிப்பதும், குறிப்பிட்ட இடைவேளையில் சிறுநீர் கழிப்பதும் இந்தப் பிரச்னைக்கு மிக முக்கியம். ஆனால், பலரும் தண்ணீர் குடிக்கவே மறந்து விடுகிறார்கள். வெயில் காலத்தில் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருந்து பழகுவதால் தாகமும் எடுப்பதில்லை, அதனால் சிறுநீரும் கழிப்பதில்லை. இதுதான் கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்னைக்கான முக்கிய காரணம்.
ஏசி அறையில் இருந்தாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்கவில்லை என்பவர்கள், ஊறவைத்த சப்ஜா விதைகளை தண்ணீரில் சேர்த்து எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் குடிக்கலாம். இது சுவையாகவும் இருக்கும், உடல் சூட்டையும் தணிக்கும். நுங்கு, இளநீர், பதநீர் இந்த மூன்றுக்கும் நீர்க்கடுப்பை வராமல் தடுக்கும் தன்மை உண்டு. எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். நீர்மோர் நிறைய குடிக்கலாம். இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு மறுநாள் நீராகாரமாக எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் மோரும், சின்ன வெங்காயமும் சேர்த்து சாப்பிடலாம்.
நீர்க்கடுப்பை விரட்டுவதில் வெந்தயம் மிகச் சிறந்த மருந்தாகச் செயல்படும். முதல்நாள் இரவே தண்ணீரில் சிறிது வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் சாப்பிடலாம். அப்படிச் சாப்பிட்டால் தலைவலி வரும் என்பவர்கள், வெறும் வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
பனங்கற்கண்டை கைவசம் வைத்துக்கொண்டு, அவ்வப்போது சிறிது சுவைத்துக்கொண்டே இருக்கலாம். ஃப்ரெஷ்ஷான புளியங்கொட்டையை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், புளியங்கொட்டையைப் பொடித்தும் சிறிது சாப்பிடலாம். கற்றாழையை அலசி, அரைத்து தண்ணீர் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம்.
உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவும். துரித உணவுகளைத் தவிர்க்கவும். பார்லியை கொதிக்க வைத்த நீரைக் குடிக்கலாம். சர்க்கரைநோய் இல்லாதவர்கள் அதிலேயே சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் பாதாம் பிசின் என கிடைக்கும். இதை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்தால் மறுநாள் ஜெல் போல ஊறிவிடும். அதை பாலில் கலந்தோ, ஜூஸில் கலந்தோ குடிக்கலாம். நீர்க்கடுப்பு வந்த உடனேயே, நாட்டுச் சர்க்கரையோ, பனங்கற்கண்டோ எடுத்து தண்ணீரில் கலந்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் குடித்தால் உடனடியாக நிவாரணம் தெரியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.