தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி முண்ணனி கதாநாயகன்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன என அடுத்தடுத்து பல படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.
அவ்வப்போது கமர்ஷியல் படங்களில் நடிக்கும் தனுஷ், அசுரனில் இளைஞர் மற்றும் வயதான கதாபாத்திரங்களில் நடித்து தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார். நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியராக தனுஷ் எழுதிய பாடல்கள் பலவும் ஹிட் அடித்துள்ளன. நடிகர், பாடலாசிரியருடன் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். தனுஷ் இயக்கத்தில் பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.
அந்த வகையில் தற்போது 4வது படமாக இட்லி கடை என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் உடன் நித்யாமேனன், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாததால் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சத்யராஜ், பார்த்திபன், அருண்விஜய் ஆகியோர் பாங்காக் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இட்லி கடை படப்பிடிப்புக்காக மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ மளமளவென பரவியதால் செட் முழுவதும் காலியானது.
மேலும் காற்று வீசியதால் தீ செட் முழுவதும் பரவியதையடுத்து தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். முன்னதாக தேனி மாவட்டம் அனுப்பப்பட்டியை தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிக்காமல் இருந்த ஆண்டிபட்டி செட்டில்தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது