உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் போலீஸ் துணை ஆய்வாளர், நடைபாதையில் நின்ற பெண் மீது காரை மோதிய பரிதாப சம்பவம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 26-ஆம் தேதி கல்யாண்பூரில் உள்ள காயத்ரி கோயில் அருகே பூக்கள் வாங்கிக் கொண்டிருந்த பூனம் சிங் மீது இந்தக் கார் மோதியது. இதனால் அவரது கால் எலும்பு முறிந்ததோடு, விலா எலும்புகளும் உடைந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் பூனம், “நான் நடைபாதையில் நின்றிருந்தபோது, தவறாக் பக்கத்தில் வந்த கார் ஒரு மோட்டார் சைக்கிளை மோதிய பின் என்னை மோதியது,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் பதிவிட்ட வீடியோவில், கமலேஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, “அவளுக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என இரக்கம் இல்லாமல் பதிலளிப்பது பதிவாகியுள்ளது. இந்த பதில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கணவர் பல்ராம் சிங் கூறுகையில், “அவர் வெளிப்படையாக குடிபோதையில் இருந்தபோதும் போலீசார் உடனடி மருத்துவ பரிசோதனை செய்யவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்ய நாங்கள் அடுத்த நாள் வரை போராட வேண்டியிருந்தது” என்றார். தற்போது பூனத்தின் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கல்யாண்பூர் ஏசிபி அபிஷேக் பாண்டே விளக்கமளித்தார். “காரை ஓட்டிய துணை ஆய்வாளர் தெற்கு மண்டல காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது தற்போது எஃப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவரின் புகாரில் அத்தகைய குறிப்பு இல்லாததால், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.