தடுப்புக் காவல், விசா ரத்து - டிரம்ப் நடவடிக்கையால் அச்சத்தில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள்
BBC Tamil April 30, 2025 03:48 PM
Getty Images சித்தரிப்புப் படம்

கடந்த சில வாரங்களாக எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி சாதாரண ஆடையில் வரும் அதிகாரிகள், மாணவர்களை அடையாளம் தெரியாத வாகனங்களில் ஏற்றி தடுப்பு காவல் முகாம்களுக்கு அழைத்துச் செல்வது அமெரிக்காவில் வாடிக்கையாகிவிட்டது.

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற ஒரு காட்சியாக இந்த கைதுகள் மாறிவிட்டன.

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அந்த வீடியோவில் தோன்றும் மாணவர்கள் யாரும் எந்தவிதமான குற்ற வழக்குகளையும் எதிர்கொள்ளவில்லை. மாறாக அவர்களின் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்ற காரணத்திற்காகக் குறிவைக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் படிப்பதற்காக விசா பெற்றிருப்பதை ஒரு 'சிறப்புரிமை' என்று டிரம்ப் நிர்வாகம் அடிக்கடி கூறி வருகிறது. மேலும் பல்வேறு காரணங்களுக்காக, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசா ரத்து செய்யப்படும் என்றும் கூறுகிறது.

ஆனால் ஆரம்பத்தில் நினைத்தது போன்றில்லாமல், இந்த விவகாரம் மிகப் பெரியதாக மாறி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சமீபத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் அல்லது தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என 1000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் சட்ட நிலை மாற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறது, இன்சைட் ஹையர் எட் என்ற இணைய செய்தி நிறுவனம். இந்த நிறுவனம் கல்வித்துறை சார்பான செய்திகளை வழங்குகிறது.

சென்னயைப் பூர்வீகமாகக் கொண்ட, கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ரஞ்சனி ஸ்ரீநிவாசன் கடந்த மாதம் இதே அடிப்படையில் நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்கச் சென்ற அவர், பாலத்தீன ஆதரவு நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்பட்டது.

விசா ரத்துக்கு சரியான காரணங்கள் ஏதும் தெரியவில்லை. மேலும் பல்கலைக் கழகங்கள் இந்த மாற்றங்கள் குறித்து, சர்வதேச மாணவர்களின் விசா நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள அரசாங்கத்தால் இயக்கப்படும் தரவுத் தளங்களைப் பார்த்தே தெரிந்து கொள்கின்றன.

அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள் முதல் செல்வாக்கு மிக்க ஐவி லீக் நிறுவனங்கள் வரை, அனைத்து கல்வி நிறுவனங்களுமே இந்தத் தடுப்புக் காவல் மற்றும் விசா ரத்து நடவடிக்கைகளால் பதற்றம் அடைந்துள்ளதாக மாணவர்களும் கல்லூரிப் பணியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும், வெளிநாட்டு மாணவர் ஒருவர், "அடுத்து கைது செய்யப்படுவது நானாகக்கூட இருக்கலாம்," என்று கூறுகிறார். அவர் காஸாவில் நடக்கும் போர் மற்றும் இஸ்ரேல் குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அரசமைப்பு அவருக்கு வழங்கியுள்ள உரிமைகள் அச்சிடப்பட்ட அட்டையைத் தன்னுடன் எப்போதும் வைத்துக் கொண்டு நடமாடுவதாகத் தெரிவிக்கிறார். சட்ட அமலாக்கத்துறை அவரைத் தடுத்து நிறுத்தினால் இது அவருக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார்.

டெக்சாஸில் வசித்து வரும் மற்றொரு மாணவர், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குக்கூட தனது குடியிருப்பை விட்டு வெளியில் செல்ல அஞ்சுவதாகக் கூறுகிறார். சில கல்லூரிகளில் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவுக்கு திரும்பத் தயக்கம் காட்டி வருவதால் சில துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய பல மாணவர்கள், ஊடகங்களில் பேசுவதால் மீண்டும் அரசின் இலக்குக்கு ஆளாவோம் என்ற கவலையைத் தெரிவித்து, அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற, அமெரிக்க கல்வித்துறையை பிபிசி அணுகியுள்ளது.

அல்லல்படும் மாணவர்கள் BBC சில கல்லூரிகளில் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவுக்கு திரும்பத் தயக்கம் காட்டி வருவதால் சில துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா ரத்து செய்யப்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகளும் ஒரு காரணமாக உள்ளது. வேகமாக வண்டி ஓட்டுதல் போன்ற மிகச் சிறிய சட்ட விதிமுறை மீறல்களும் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், "பெரும்பாலானவர்கள்" குறிவைக்கப்படுவதற்குக் காரணம் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களில் அவர்களின் பங்கு என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவே அறிவித்துள்ளார்.

போராட்டங்களை ஒடுக்க வெள்ளை மாளிகை தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. வெள்ளை மாளிகை அதிகாரிகள், இந்தப் போராட்டங்கள், பல கல்லூரிகளில் படிக்கும் யூத மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பயங்கரவாத குழு என்று அறிவிக்கப்பட்ட ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்த போராட்டக்காரர்களையும் குற்றம் சாட்டுகின்றனர் அந்த அதிகாரிகள்.

"இத்தகைய பைத்தியக்காரர்களை நான் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் விசாவை பிடிங்கிக் கொள்வேன். இதை ஒவ்வொரு நாளும் செய்வோம்," என்று மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரூபியோ.

மக்கள் விடுதலைக்கான குழுக்கள் பலவும் இத்தகைய தடுப்புக்காவல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நாடு கடத்தும் செயல்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். இது அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை மீறும் செயல் என்று கூறுகின்றனர்.

ஹமாஸுடனான தொடர்பை நிராகரிக்கும் மாணவர்கள், காஸா போர் குறித்தும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருப்பது தொடர்பாகவும் அவர்கள் நிகழ்த்திய உரைகள் காரணமாகவே குறிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

வசந்த காலம் வர இருப்பதை நினைவூட்டும் வகையில் செர்ரி மலர்கள் மற்றும் துலிப் மலர்கள் பின்னணியில், "எங்கள் மாணவர்களைப் பாதுகாக்கவும்" என்ற நோட்டீஸ்கள் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக வகுப்பறைக் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

மார்ச் மாதம், இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் பதர் கான் சூரியை அவருடைய விர்ஜீனியா வீட்டில் வைத்து ஃபெடரல் அதிகாரிகள் கைது செய்தனர். "சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பை ஆதரிப்பதாகவும்," அவருக்கு "நன்கு அறியப்பட்ட பயங்கரவாதியுடன்," தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறது உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை.

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு ஆலோசகராகப் பணியாற்றிய ஒருவரின் மகளை சூரி திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் பாலத்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.

சூரியின் வழக்கறிஞர்கள், அவர் வெகு சில முறையே அவரது மாமனாரை சந்தித்து உள்ளதாகவும், அவருடைய மனைவியின் பூர்வீகத்தைக் காரணமாகக் காட்டி சூரி குறிவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பாலத்தீனத்திற்கு ஆதரவாக யார் பேசினாலும் இதே நிலைதான் Getty Images கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம்

கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்த முஹ்மத் கலீல் கைது செய்யப்பட்ட பிறகு சூரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்து பெற்ற கலீல், நியூயார்க்கில் அவருடைய வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கலீல் தற்போது நாடு கடத்தப்படுவதற்காக லூசியானா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அதே முகாமில் ருமெய்ஸா ஓஸ்தர்க் என்பவரும் தங்க வைக்கப்பட்டுள்ளார். டுஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் அவர், மாணவர் பத்திரிக்கை ஒன்றில் காஸா குறித்த தலையங்கத்தை வேறு ஒருவருடன் சேர்ந்து எழுதியுள்ளார். அவர் மாசசூசெட்ஸில் வைத்து அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக அதிகாரிகளைச் சந்திக்கச் சென்ற மொஹ்சென் மஹ்தவி கடந்த திங்கள்கிழமை அன்று, வெர்மாண்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கொலம்பியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலீலை போன்று, அவரிடமும் க்ரீன் கார்ட் உள்ளது.

சூரிக்கு பரீட்சயமான, ஜார்ஜ் டவுன் மாணவர் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, "தற்போது நிகழும் தடுப்புக் காவல் நடவடிக்கைகளைப் பார்க்கையில், பாலத்தீனம் குறித்து யார் பேசினாலும் அவர்கள் மீதும் இத்தகைய நடவடிக்கை தொடரும் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறினார்.

அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களே குறிவைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. கலீல் விவகாரத்தில், எவர் ஒருவரின் இருப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அச்சுறுத்தும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துமோ அவரை நாடு கடத்த 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வழிவகை செய்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொலம்பியா யூத முன்னாள் மாணவர்கள் சங்கம் (Columbia Jewish Alumni Association), கலீலின் கைதை வரவேற்றது. மேலும் எக்ஸ் பக்கத்தில், "குழப்பத்தின் தலைவன்" என்று அவரை விமர்சித்துள்ளது.

'மாறுபட்ட கருத்துகளை அமைதிப்படுத்தும் செயல்' BBC

சமீபத்தில் ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.பி- என்.ஓ.ஆர்.சி. இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், குடியேற்ற விவகாரம் தொடர்பாக டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அவரது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற செயல்பாடுகளைக் காட்டிலும் இதில் அவருக்குக் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்களும் தற்போது நிர்வாக ரீதியாகக் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம், யூத எதிர்ப்பைக் கட்டுக்குள் வைக்கும் வெள்ளை மாளிகையின் சிறப்புப் பிரிவு, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு வழங்க வேண்டிய 2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. "தன்னுடைய சுதந்திரமான செயல்பாட்டைக் கையளிக்கும்," வகையில் அமைந்துள்ள டிரம்பின் கோரிக்கைகளை பல்கலைக் கழகம் ஏற்க மறுத்ததால் இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் சிலரின் தகவல்களை அளிக்க ஹார்வர்ட் நிர்வாகம் மறுக்கும் என்றால், அந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டிரம்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக பேராசிரியர், நதேர் ஹஷேமி, "போராட்டக்காரர்களை மிரட்டி, மாறுபட்ட கருத்துகளை அமைதியாக்குவதுதான் அரசின் நோக்கம்," என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர், தன்னுடைய பட்டமளிப்பு விழாவை பார்க்க தன்னுடைய பெற்றோர்களை அமெரிக்கா வர வேண்டாம் என்று கூறிவிட்டதாகத் தெரிவிக்கிறார். பட்டமளிப்பு நிகழ்வில் அவர் கலந்து கொள்வாரா என்பதே கேள்வியாக உள்ளதாகவும் தெரிவித்தார் அந்த மாணவர்.

மாணவர்களுக்கு உதவும் பேராசிரியர்கள் Reuters ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை டிரம்ப் அரசு முடக்கியது

தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் தனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்து வருவதாகத் தெரிவிக்கிறார் அவர். மேலும் திடீரெனக் கைது செய்யப்பட்டால் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலிட்டு அதற்கேற்றப்படி தன்னைத் தயார்ப்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அனைத்து குறுஞ்செய்தி செயலிகளிலும் குறுஞ்செய்திகளை முழுமையாக அழித்துவிட்டேன். எஸ்.ஓ.எஸ். மோடில் எனது போனை உடனடியாக எப்படி 'லாக்' செய்வது என்பதையும் கற்றுக் கொண்டேன் என்கிறார் அந்த இந்திய மாணவர்.

குடியேற்றத்துறை அதிகாரிகள் வளாகத்திற்கு வரும்போது, மாணவர்கள் பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ள காலியான அறைகளை அவர்களுக்கு ஜார்ஜ் டவுன் பேராசிரியர்கள் ஒதுக்கியுள்ளதாகவும் பேராசிரியர் ஹஷேமி கூறுகிறார்.

வீட்டு வாசலில் வைத்துக் கைது செய்யப்பட்ட ருமெய்ஸா ஓஸ்தர்க்கு என்ன நடக்கும் என்று மாசசூசெட்ஸில், பாஸ்டனுக்கு வெளியே டுஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

BBC ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் காஸாவில் வாழும் பாலத்தீனியர்களுக்காக பிரார்த்தனை நடத்தும் இமாம்

ரமலான் இரவு விருந்துக்காக வீட்டில் இருந்து கிளம்பிய அவரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது பதிவான வீடியோவில் அவர் குழப்பத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்டார்.

இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட பி.டி.எஸ் (Boycott, Divest and Sanction (BDS) இயக்கத்திற்கு ஆதரவாகத் தலையங்கம் ஒன்றை மற்றொரு நபருடன் சேர்ந்து எழுதியுள்ளார் அவர்.

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுள்ள அந்தேரி மேய்ர் பிபிசியிடம் பேசியபோது, இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார். அவருக்குத் தெரிந்த, தாயகத்திற்குத் திரும்பியுள்ள, மாநாட்டில் பங்கேற்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப அஞ்சுவதாகக் கூறுகிறார்.

"பலரும் கல்வி நிறுவனத்திற்கு வராமல் ஆங்காங்கே இருந்து பணியாற்றுகின்றனர். இந்த நாட்டிற்கு அவர்களால் திரும்ப வர இயலாது என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக எழுந்த வதந்தி சில மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

"வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. கல்லூரிக்குச் செல்ல, மளிகைக் கடைக்குச் செல்லக்கூட பயமாக உள்ளது," என்று பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறினார்.

"நான் நடந்து செல்லும்போது, சாதாரண மனிதர்களைப் போல் உடை அணிந்து வரும் அதிகாரிகள் என்னை அணுகுவார்கள் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது" என்றார் அவர்.

க்ரீன் கார்ட் வைத்திருந்தாலும், பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்றாலும்கூட, அதிபரை எதிர்த்து எழுதியுள்ளதால் அவர் இத்தகைய அச்சத்திற்கு ஆளாகி வருவதாகக் கூறுகிறார்.

"எவ்வளவு தூரம் இந்த நிர்வாகம் ஆழமாகச் செல்ல முடியும். எப்படி புலம்பெயர்ந்தோம் என்பது வரை துருவித் துருவி ஆராய்வார்களா?" என்று கேள்வி எழுப்பும் அவர், "என் அறிவாற்றலுக்கு எட்டாமல் எதையாவது நான் சொல்லியிருந்தால்?" என்றும் கேட்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.