அப்பாடா... 14 ஆண்டுகள் கிடப்பில் இருந்த சிவாஜி சிலை மே 9 ம் தேதி திருச்சியில் திறப்பு!
Dinamaalai April 30, 2025 08:48 PM

 


 தமிழகத்தில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை நிறுவப்படும் என  முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு 9 அடி வெண்கல சிலை சிவாஜிக்கு நிறுவப்பட்டது. 

அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அந்த சிலை திறக்கப்படவில்லை. இந்நிலையில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து  வந்தனர். இது குறித்து  சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எழுப்பிய கேள்விக்கு சிவாஜி சிலை விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். 

சிவாஜி சிலையை பாலக்கரை பகுதியிலேயே திறப்பதில் சில சிக்கல்கள் இருந்த காரணத்தினால் அந்த சிலையை வேறு இடத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் அருகே உள்ள வார்னர்ஸ் சாலையில்(சோனா மீனா திரையரங்கம் எதிரே) சிவாஜி சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று பாலக்கரை பகுதியில் இருந்த சிவாஜி சிலை முழுவதுமாக அகற்றப்பட்டு  வார்னர்ஸ் சாலையில்  மே 9ம் தேதி நிறுவப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள   திருச்சி வர உள்ள நிலையில் அவர் சிவாஜி சிலையை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.