ஹிட்லரின் மரணம் குறித்து விலகாத மர்மங்கள் - இறக்கும் தருவாயில் எப்படி இருந்தார்?
BBC Tamil April 30, 2025 03:48 PM
Getty Images போரில் தோற்றுவிட்டோம் என்று அனைவருக்கும் தெரிந்ததால் அந்தச் சூழல் அழுத்தம் தருவதாக இருந்தது.

"போல்ஷெவிஸத்துக்கு எதிராகத் தனது கடைசி மூச்சு வரை போராடிய நமது ஃப்யூரர், அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனிக்காக இந்த மதியம் உயிர் நீத்தார்."

கடந்த 1945ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஆண்டன் ப்ரூக்நரின் ஏழாவது சிம்பொனியை இடைமறித்து இந்தத் தகவலை ஒலிபரப்பியது ஹாம்பர்க் ரேடியோ.

லண்டன் நாளிதழான தி டைம்ஸின்படி, "ஒட்டுமொத்த உலகின் கண்களுக்கு, தீமையின் முழு உருவமாக மாறிய" ஒருவராகப் பார்க்கப்படும் ஒரு மனிதரின் மரணச் செய்தி வேகமாக உலகெங்கும் பரவியது.

"இந்தச் செய்தியைச் சொல்வதற்காக எங்கள் நிகழ்ச்சி நிரலை இடைநிறுத்துகிறோம்: ஹிட்லர் இறந்துவிட்டார் என்று ஜெர்மன் ரேடியோ தற்போது அறிவித்திருக்கிறது. நான் மறுபடியும் சொல்கிறேன். ஹிட்லர் இறந்துவிட்டார் என்று ஜெர்மன் ரேடியோ தற்போது அறிவித்திருக்கிறது," என்று சில நிமிடங்களுக்குப் பின்னர் பிபிசி அறிவித்தது.

காலப்போக்கில் நாஜி தரப்பில் வந்த செய்தி தவறென்பதும், இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கக் காரணமாக இருந்த அந்த மனிதர் மே 1 அல்ல, அதற்கு முந்தைய தினமே இறந்துவிட்டார் என்பதும் பின்னர்தான் தெரிந்தது.

அதேபோல் அவர் ஒரு தைரியமான ராணுவத் தலைவரைப் போல போரில் சண்டையிடும்போது கொல்லப்படவில்லை என்பதும், நிலத்திற்கு அடியில் இருந்த பதுங்கிடத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

எண்பது ஆண்டுகள் கழிந்த பிறகும், 60 லட்சம் ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்படுவதற்கு மூல காரணமாக இருந்த மனிதரின் மரணத்தைப் பற்றிய சூழ்நிலைகளைச் சுற்றி இருக்கும் மர்மங்கள் இன்னும் விலகவில்லை.

வரலாற்று ஆவணங்கள் மற்றும் மூன்று நிபுணர்களின் உதவியுடன், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய ஒரு பேரரசைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட சர்வாதிகாரியின் கடைசி நாட்களை பிபிசி முண்டோ மீள்கட்டமைப்பு செய்துள்ளது.

நிரந்தரப் பின்வாங்கல் Getty Images அதிகாரபூர்வ இல்லத்திற்குப் பல மீட்டர்கள் கீழே பெர்லினில் கட்டப்பட்ட பதுங்கிடத்தில் ஹிட்லர் தனது வாழ்நாளின் இறுதி நாட்களைக் கழித்தார்.

கடந்த 1944இல் நாஜி ஜெர்மனியின் விதி நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. மேற்கில் பிரான்ஸின் நார்மண்டியில் நேச நாடுகளின் படையெடுப்பு, தெற்கே ரோம், இத்தாலி மீட்கப்பட்டது, கிழக்கில் முன்னேறி வரும் சோவியத் படைகள் என எல்லா விஷயங்களும் தோல்விக்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதையே உணர்த்தின. ஆனால் ஹிட்லர் சரணடைவதற்கான எந்த முகாந்திரத்தையும் காட்டவில்லை.

"கடந்த 1944ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் தேதி, (தற்போதைய போலந்தில் இருக்கும்) வுல்ஃப்'ஸ் லேய்ர் பகுதியில் இருந்து மேற்கில் (பெல்ஜியம் மற்றும் லக்ஸெம்பர்க்கின் எல்லை அருகே) அட்லெர்ஹோர்ஸ்ட்டில் இருக்கும் தனது தலைமையகத்துக்குச் சென்றார் ஹிட்லர். அங்கிருந்து ஆர்டெனஸ் பகுதியில் நடந்த போரை வழிநடத்தினார்," என்று பிபிசி முண்டோவிடம் கூறினார் ஜெர்மன் சரித்திர ஆசிரியர் ஹரால்டு சாண்ட்னர்.

நாஜிக்களின் கடைசி முக்கியமான ராணுவ நடவடிக்கையான அந்தப் போர் தோல்வியைத் தழுவிய பிறகு, 1945ஆம் ஆண்டு, ஜனவரி 16 அன்று ஹிட்லர் பெர்லினுக்கு திரும்பினார். ஜெர்மன் சர்வாதிகாரியின் வாழ்க்கையின் மிக முழுமையான காலவரிசையாகக் கருதப்படும் அவரது புத்தகமான 'தி இடினெரி'க்காக இருபது ஆண்டுகள் செய்த ஆய்வின் மூலம் இதை உறுதிபடக் கூறுகிறார் சாண்ட்னர்.

"மார்ச் 3ஆம் தேதி ஒரு போர்ப்படையைச் சந்திக்கச் சென்றதைத் தவிர சாகும் வரை தனது தலைநகரை விட்டு ஹிட்லர் வெளியே வரவில்லை," என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் பெர்லினில் நேச நாடுகள் குண்டு வீசுவதற்காக விமானங்களை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தனது சான்சலர் அலுவலகத்துக்கு அடியில் இருக்கும் பதுங்கு குழியிலேயே அதிக நேரத்தைக் கழிக்கத் தொடங்கினார் ஹிட்லர். பத்து ஆண்டுகளுக்கு முன்பே தலைநகரில் பூமிக்கு அடியில் அவர் கட்டிய பெரிய, வளமையான கட்டடம் அது.

Getty Images தனது தோழர்களை ஈர்த்த தேவதூதரைப் போல் இருந்த ஹிட்லர், தனது இறுதி நாட்களில் அந்தப் பிம்பத்தின் நிழலைப் போன்று இருந்ததாக அவருடன் இறுதிவரை இருந்தவர்கள் கூறுகிறார்கள்.

"ஜனவரி 24ஆம் தேதியில் இருந்து அந்தப் பதுங்கு குழியிலேயே ஹிட்லர் தூங்கத் தொடங்கினார்," என்று விளக்கினார் சாண்ட்னர்.

ஏப்ரல் ஆரம்பத்தில், பெர்லின் நகருக்குக் கிழக்கே, சில கி.மீ தூரத்தில் இருந்து பயங்கரமான பீரங்கித் தாக்குதலை சோவியத் துருப்புகள் நிகழ்த்தியபோதும்கூட அந்த நாஜி தலைவர் வெளியே வரவில்லை என்று பிபிசி முண்டோவிடம் கூறினார் பிரிட்டிஷ் சரித்திர நிபுணரான தாமஸ் வெப்பர்.

"தனது வாழ்வின் கடைசி வாரம் முழுவதையும் அந்தப் பதுங்கு குழியிலேயே ஹிட்லர் கழித்தார். ஏப்ரல் 20ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்று தன்னைச் சந்திக்க வந்த விருந்தினர்களைப் பார்க்க மேலே சான்சலர் அலுவலகத்துக்கு வந்தார் ஹிட்லர். அதன் பிறகு 23ஆம் தேதி மேலே இருந்த தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தார். அப்போதுதான் அவருடைய கடைசி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன" என்கிறார் பிரிட்டனின் அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகவும், அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் இருக்கும் அவர்.

நாஜி தலைவருடன், அவருக்கு நெருக்கமான பலரும் அந்தப் பதுங்கிடத்தில் இருந்ததாகப் பல விசாரணைகளும், ஆவணங்களும் ஒப்புக் கொள்கின்றன.

அவருடைய காதலி ஈவா ப்ரான், கட்சி செயலாளர் மார்ட்டின் போர்மன், கொள்கைப் பரப்பு அமைச்சர் ஜோசஃப் கோயபெல்ஸ் மற்றும் அவரது குடும்பம், ஹிட்லரின் காரியதரிசிகள், பாதுகாவலர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

நெரிசலும்,குளிரும் நிரம்பிய கல்லறை Getty Images பார்த்தவர்கள் கூற்றுப்படி ஹிட்லரின் பதுங்கு குழியில் எந்த அடையாளமும், அதிக பொருட்களும் கிடையாது. அவர் மிகவும் மதித்த ப்ரஷ்ய அரசர் 'ஃப்ரெட்ரிக் தி கிரேட்'டின் வரைபடம் மட்டும் ஹிட்லரின் அலுவலகத்தில் இருந்தது.

ஃப்யூரர்பங்கர் என்று அழைக்கப்பட்ட அந்த ரகசியக் கட்டடம் 30 அறைகளும், அரங்குகளும் கொண்டது. ஹிட்லரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பல மீட்டர்கள் கீழே இருந்தது. மேலே இருந்த சான்சலர் அலுவலகத்தைப் போலன்றி இது அதிக அலங்காரங்களும், பொருட்களும் இல்லாமல் இருந்தது.

அதன் நான்கு மீட்டர் தடிமனான சுவர்கள் நேச நாடுகளின் குண்டுகளில் இருந்து பாதுகாத்தன. அவற்றின் நவீன காற்றமைப்பு வசதியும், ஆற்றல் உருவாக்கும் திறனும் அங்கு மனிதர்கள் வாழத் தேவையான வசதியைச் செய்து கொடுத்தன.

ஆனால் அது வசதியாக இருந்தது என்று சொல்ல முடியாது. "தொடர்ந்து ஜெனரேட்டர்கள் உதவியுடன் பல்புகள் எரிந்து கொண்டிருந்ததாலும், அங்கு சுற்றிக் கொண்டிருந்த காற்றாலும் அந்தப் பகுதி இருள் மூடிய, சத்தம் மிகுந்த, குளிர்ந்த, நாற்றமடிக்கும் பகுதியாக இருந்ததாக விவரணைகள் நமக்குச் சொல்கின்றன," என்று பிபிசி முண்டோவிடம் குறிப்பிட்டார் பிரிட்டனை சேர்ந்த சரித்திர ஆய்வாளரான கரோலின் ஷார்பிள்ஸ்.

"அங்கு வசித்தோர் அந்தப் பதுங்கிடம் நெரிசலாக இருந்தது போல் உணர்ந்ததாக, க்ளாஸ்ட்ரோபோபிக் ஆக இருப்பதாக உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். எப்போதும் செயர்கை விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் யாருக்கும் நேரம் பற்றிய உணர்வே இல்லை," என்று குறிப்பிட்டார் பிரிட்டனின் ரோஹேம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அவர்.

இவ்வளவு சங்கடத்துக்கு இடையில் போர்த்தரப்பில் இருந்து வரும் தகவல்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. "போரில் தோற்றுவிட்டோம் என்று அனைவருக்கும் தெரிந்ததால் அந்தச் சூழல் அழுத்தம் தருவதாக இருந்தது," என்று சொல்கிறார் சாண்ட்னர்.

ஆனால் ஹிட்லரின் தினசரி வாழ்வில் மாற்றமேதுமில்லை.

அவர் மதியத்தையும் தாண்டிதான் எழுந்திருப்பார். அவரது தளபதிகளுடன் நாளுக்கு இரண்டு முறை சந்திப்பு நிகழ்த்துவார். அதன் பிறகு தேநீர் அருந்திவிட்டு, அதிகாலை வரை காரியதரிசிகளிடம் உரையாற்றிக் கொண்டிருப்பார்," என்று தி இடினெரியின் ஆசிரியர் கூறுகிறார்.

எதிர்த் தாக்குதல்களுக்கும் சதித் திட்டங்களுக்கும் இடையே Getty Images வாழ்வின் இறுதி நாட்களில் தன்னுடன் இருந்தவர்கள் பலர் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கருதினார் ஹிட்லர்.

ஜெர்மானிய தலைநகரைச் சூழ்ந்திருக்கும் சோவியத் படைகள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தச் சொல்லி, ஏப்ரல் 21ஆம் தேதி தனது 56வது பிறந்தநாளுக்கு அடுத்த நாள், தனது மூன்று தளபதிகளுக்கு ஆணையிட்டார் ஹிட்லர்.

ஆனால் அவர் வரைபடத்தில் பார்த்த பிரிவுகள் எல்லாம் பீரங்கிகளோ, பெரும் படைகளோ அல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்கள் மட்டும்தான் என்று அவரிடம் குறிப்பிட யாருக்கும் துணிவில்லை.

அதற்கு அடுத்த நாள் செஞ்சட்டை ராணுவ வீரர்கள் நகருக்குள் நுழைந்துவிட்டனர் என்றும், தான் ஆணையிட்டிருந்த எதிர்த் தாக்குதல் தோல்வியடைந்து விட்டது என்றும் தெரிந்துகொண்ட ஹிட்லர், தனது தளபதிகளிடம் கத்தித் தீர்த்து, பிறகு முதன் முறையாக போரில் தோற்றுவிட்டோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"என்னால் தொடர முடியாது. என் வாரிசு பதவியேற்றுக் கொள்வார்," என்று சொன்னதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தருணம் ஜெர்மானிய திரைப்படமான டவுன்ஃபால்-இல் (பின்னர் லத்தீன் அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது) ''மிகச் சரியாகக் காட்டப்பட்டது" என்கிறார் சாண்ட்னர்.

தோல்வியை ஒப்புக் கொண்ட பிறகும், ஆல்ப்ஸுக்கு தப்பிச் செல்லும்படி 23ஆம் தேதி கூறிய, அவரது ஆயுதப் பிரிவு அமைச்சரும், ஹிட்லருக்கு விருப்பமான கட்டடக்கலை வல்லுநருமான ஆல்பர்ட் ஸ்பியர் சொன்னதை அவர் முற்றிலுமாக மறுதலித்தார்.

Getty Images சரித்திர ஆதாரம் என்ன சொல்கிறதோ அதை இந்த மெழுகு பொம்மை மறு உருவாக்கம் செய்திருக்கிறது: கடைசி காலத்தில் ஹிட்லர் எதார்த்தத்தில் இருந்து விலகி இருந்தார்.

ஹிட்லர் பதவி விலகுவதாகச் சொல்லப்படும் தகவல், நாஜி விமானப் படையான லுஃப்ட்வாஃபே–யின் தலைவர் ஃபீல்டு மார்ஷல் ஹெர்மன் கோரிங்கின் காதுகளை எட்டியது. 1939, 1941 ஆகிய இரு ஆண்டுகளில் இரண்டு அரசாணைகள் மூலம் இவரைத் தனது வாரிசாக, தனக்கடுத்து பதவியேற்றுக் கொள்பவராக நியமித்திருந்தார் ஹிட்லர்.

ஆனால் பவேரியாவில் தஞ்சமடைந்திருந்த கோரிங் தன்னைப் பதவியில் இருந்து நீக்கும்படி ஹிட்லருக்கு தந்தி கொடுத்தார். அதை துரோகமாகக் கருதினார் ஹிட்லர்.

"கடுங்கோபமடைந்த ஹிட்லர், கோரிங் எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துகளை அரசுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் அதை மீறினால் துரோகம் செய்ததற்காகக் கொல்லப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டார்," என்கிறார் ஷார்பிள்ஸ்.

ஆனால் இது மட்டும் ஒரே துரோகமல்ல. 28ஆம் தேதி, அச்சுறுத்தும் துணை ராணுவமான SS-இன் தலைவர் ஹெயின்ரிக் ஹிம்லெர், சுவீடன் தூதர்களுடன் பேசியதாகவும், அவர்களிடம் அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஹிட்லருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

"எல்லோரும் என்னிடம் பொய்யுரைக்கிறார்கள், எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள், யாருமே என்னிடம் உண்மை சொல்லவில்லை. ஆயுதப் படை என்னிடம் பொய் சொல்லியது, இப்போது SS-ம் என்னைக் கைவிட்டுவிட்டது," என்று அந்த சர்வாதிகாரி சொன்னதாக, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் எதிர் உளவுப்பிரிவின் முன்னாள் தலைவராக இருந்த கை லிடெலின் அறிக்கைகள் சொல்கின்றன.

கடைசி வாய்ப்பு Getty Images விமானி ஹன்னா ரெயிஸ்ச், சோவியத் துருப்புகளின் வியூகத்தை உடைத்துக் கொண்டு சான்சலர் அலுவலகம் முன்பாகத் தனது விமானத்தை நிறுத்தினார். ஆனால் ஹிட்லர் அவரோடு தப்பிச் செல்ல மறுத்துவிட்டார்.

அவர்கள் இருந்த பகுதியை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது, தான் நகரை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்றும், தன் உயிரைத்தானே மாய்த்துக் கொள்ளப் போவதாகவும், தனக்கு நெருக்கமானவர்களிடம் அறிவித்தார் ஹிட்லர்.

ஆனால் கிட்டத்தட்ட இறுதி மூச்சு வரை, தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்தன. ஏப்ரல் 26க்கும் 27க்கும் இடையே, சான்சலர் அலுவலகத்துக்கு வெகு அருகில் ஒரு விமானத்தைத் தரையிறக்கும் நினைத்துப் பார்க்க முடியாத செயலைச் செய்தார் நாஜி விமானி ஹன்னா ரெயிஸ்ச்.

"அவர் ரெயிஸ்ச்-உடன் அந்த விமானத்தில் சென்றிருக்கலாம் அல்லது அதற்கும் முன்பேகூட அவர் தப்பியிருக்கலாம். ஆனால் அவர் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. அதற்குக் காரணம், அரசின் தலைவராக, தலைநகரத்தில் தன்னால் முடிந்த அளவு சண்டையிடத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையுமில்லை," என்றார் சாண்ட்னர்.

தனது கூட்டாளியான இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும், அவரது காதலி க்ளாரா பெட்டாச்சியும் இத்தாலிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் மிலனில் உள்ள சதுக்கத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட செய்தி ஏப்ரல் 28ஆம் தேதி ஹிட்லரை வந்தடைந்தது. ஏற்கெனவே உடலளவிலும், மனதளவிலும் மோசமாக இருந்த நாஜிக்களின் தலைவரது மன உறுதியை இந்தச் செய்தி அசைத்துப் பார்த்தது.

"ராணுவத்தின் சூழல் சரியாக இல்லை. ஹிட்லர் தொடர்ந்து ஊக்கமிழந்தார்," என்று சொல்லும் ஷார்பிள்ஸ், சர்வாதிகாரியின் பாதுகாவலரான ஜோஹன் ராட்டன்ஹுபரின் வாக்குமூலத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்.

போர்க்களத்தில் பெற்ற தோல்விகள் மட்டுமல்ல, பார்கின்ஸன் வியாதியால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க வருடக் கணக்கில் அவர் எடுத்து வந்த மருந்துகளும் சேர்ந்து அந்த சர்வாதிகாரியின் உடலையும், மனதையும் உருக்குலைத்துவிட்டது என்று தெரிவிக்கிறார்கள் நம்மிடம் பேசிய நிபுணர்கள்.

Getty Images ஹிட்லர் மற்றும் ஈவா ப்ரானின் உடல் மிச்சங்கள், 1945 மே மாதத்திலேயே சோவியத்துகளுக்கு கிடைத்தன. ஆனால் அதை அவர்கள் தங்கள் மேற்கத்திய நேச நாடுகளிடம் தெரிவிக்கவில்லை.

ஹிட்லர், 29ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஈவா ப்ரானை மணந்து கொண்டார். ஆனால் அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக பதுங்கு குழியில் இருந்த அனைவரிடமும் விடை பெற்றார். பிறகு தனது காரியதரிசியான கெர்ட்ரூட் ஜங்கிடம் தனது அரசியல் சாசனத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வெப்பரின் கூற்றுப்படி, "கடைசியில் போரில் தோற்றுவிட்டோம் என்ற யோசனையோடு, எங்கிருந்தாவது ஏதாவது ஒரு தீர்வு மாயமாகக் கிடைத்துவிடாதா என்ற யோசனைக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருந்தார் அவர்".

"மிகவும் வெறித்தனமான நாஜி போராளிகள், அமெரிக்க மற்றும் பிரிட்டன் துருப்புகளின் நகர போர்முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முடிவெடுத்தால் அதை அவர்களால் சமாளிக்க முடியாது என்று அவர் கருதியதாக," குறிப்பிட்டார் அந்த சரித்திர ஆய்வாளர். ஆனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை.

"ஜெர்மானிய மக்கள் தைரியமாக எதிர்த்துப் போரிடவில்லை. அதனால் அழிய வேண்டியதுதான். போரில் தோற்றது நானல்ல, ஜெர்மன் மக்கள்தான்," என்று ஹிட்லர் அறிவித்ததாக, லிடெலின் ஆய்வு குறிப்பிடுகிறது.

ஊகத்தின் தோற்றம் Getty Images ஹிட்லரின் பதுங்கு குழி எங்கிருக்கிறது என்று பெரிதாகத் தெரியவில்லை. நாஜிக்களின் புகலிடமாக அது மாறிவிடக் கூடாது என்பதற்காக அதை சோவியத்துகள் மூடி மறைத்துவிட்டதாக நம்பப்படுகிறது.

ஹிட்லர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள மட்டுமல்ல, தனது உடலையும் அழித்துவிடச் சொல்லியிருக்கிறார்.

"பதவி நீக்கம் அல்லது சரணடைவது என்ற அவமானங்களைச் சந்திப்பதைவிட உயிர் துறந்து விடுவது மேல் என்று நானும் என் மனைவியும் முடிவு செய்துள்ளோம். நாங்கள் இறந்ததும் எங்கள் உடலை உடனடியாக எரித்து விடுங்கள்," என்கிறது அவரது உயில்.

ஏப்ரல் 30ஆம் தேதி, மதியம் 3.30 மணியளவில் சர்வாதிகாரியும், அவர் மனைவியும் ஓர் அறைக்குள் சென்றார்கள். ஈவா சயனைட் குப்பியை விழுங்கினார். ஹிட்லர் தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

சில நிமிடங்கள் கழித்து பாதுகாவலர்கள் அந்த அறையை அடைந்தார்கள். இருவரது உடலையும் துணியால் மூடி, மேலே தோட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அங்கே அவர்கள் ஏற்கெனவே தோண்டியிருந்த குழியில் உடல்களைப் போட்டு, அவற்றின் மேல் எரிபொருளை ஊற்றி, தங்கள் தலைவரின் விருப்பப்படியே எரித்து முடித்தார்கள்.

Getty Images தனது உடலுக்கு என்ன ஆகும் என்று கவலைப்பட்ட ஹிட்லர், 'சர்வ வல்லமையுள்ள தேவதூதனாக' ஒரு பிம்பத்தை உருவாக்கப் பல ஆண்டுகளைச் செலவிட்டார். அந்தப் பிம்பம் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

"ரஷ்யர்களுக்கு தான் உயிரோடு கிடைத்தாலோ, அல்லது தன் உடல் கிடைத்தாலோ என்ன நடக்கும் என்பது பற்றிய பெரிய கவலை இருந்தது. மாஸ்கோவில் தான் காட்சிக்கு வைக்கப்படுவோம் என்று அவர் அஞ்சினார்," என்கிறார் வெப்பர்.

ஆனால் நாஜி தலைவரின் அந்த முடிவுகளுக்குப் பின்னால் வேறு விஷயங்களும் இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

"கடந்த 1920களின் ஆரம்பத்தில், ஹிட்லர் தன்னை ஒரு சக்தி வாய்ந்த தேவதூதர் என்பது போன்ற பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி வைத்திருந்தார்." அந்த பிம்பம் அப்படியே இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதாக விவரித்தார் தாமஸ் வெப்பர்.

ஒரு விதத்தில் இந்த லட்சியத்தில் ஹிட்லர் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இறந்ததற்கான வரலாற்று ஆதாரம் எக்கச்சக்கமாக இருந்தாலும், அவர் உயிர் பிழைத்து தென் அமெரிக்கா சென்றுவிட்டதாக அவர் இறந்து பல பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் சுற்றிக் கொண்டிருந்தன.

இந்தக் கட்டுக்கதைகளை சோவியத்துகள் ஊக்குவித்தனர். "என்னதான் மே 1945-இல் இருந்தே அவரது உடல் தங்களிடம் இருந்தாலும் தங்களது மேற்கத்திய நேச நாடுகளுடன் சேர்ந்து, ஹிட்லரின் மரணத்தைப் பற்றிய சந்தேகத்தை விதைக்கும் வேலையை ஜோசஃப் ஸ்டாலினும் செய்தார்" என்று சாண்ட்னர் கூறுகிறார்.

Getty Images எங்கே சிறைபிடிக்கப்பட்டு, பரிசுக்கோப்பை போலக் காட்சிக்கு வைக்கப்படுவோமோ என்று பயந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். தன் உடல் அழிக்கப்பட வேண்டும் என்ற ஆணையையும் அவர் விடுத்திருந்தார்.

ஆனால் வெப்பரை பொறுத்தவரை, அந்தப் பதுங்கு குழியை விட்டு ஹிட்லர் தப்பிச் சென்றார் என்ற கோட்பாடுகள், நாஜி தலைவரின் உயர்தற்பெருமை மனநிலைக்குச் சற்றும் பொருந்தவில்லை என்கிறார்.

"ஹிட்லரின் பார்வைப்படி பார்த்தால், அதிகாரம் இல்லாமல் தனிமையில் ஒரே ஒருநாள்கூட வாழ்வது பயனற்றது" என்கிறார் அந்த வரலாற்று அறிஞர்.

மேலும், "ஹிட்லருக்கு மக்களின் பாராட்டு மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருப்பவர்களின் பாராட்டும் முக்கியம். அவர் சமூகத் தொடர்புக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கிய ஒரு மனிதர். அப்படிப்பட்ட ஒரு மனிதர், அர்ஜென்டினாவின் கிராமப்புறப் பகுதிகளில் மறைந்து வாழ ஆசைப்படுவார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்," என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.