உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராஸ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்ஹர் பட்டி பகுதியில், 8 வயது சிறுவன் அன்மோல் மீது நடந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்மோலை, திடீரென வினித் கண்ணுஜியா மற்றும் சுமித் கண்ணுஜியா என்ற இருவர், உயரத்தில் தூக்கி நடைபாதையில் வீசியுள்ளனர். குழந்தை தரையில் மோதியவுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாகவும், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலையில் பலத்த காயங்களுடன் அன்மோல், முதலில் ராஸ்ரா சமூக சுகாதார மையத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது நிலை மோசமாக உள்ளதாக கூறிய மருத்துவர்கள், அவரை லைஃப்லைன் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தனர். இங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கைகளில், குழந்தையின் தலையில் 6 இடங்களில் எலும்பு முறிவுகள் மற்றும் 8 இடங்களில் ரத்தம் உறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது நிலை மேலும் மோசமானதால், லக்னோவின் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அன்மோலின் தந்தையான மோகன் குப்தா போலீசில் புகார் அளித்திருந்தாலும், இதுவரை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்படவில்லை. குடும்பத்தினர், “எங்கள் குழந்தை மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறான்; ஆனால் தாக்கியவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை” எனக் கூறி நியாயம் கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சிறுவன் தாக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விரித்து வருகிறார்கள்.