ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு தேர்வாணையம் சார்பில் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்து முடிந்தது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த தேர்வின் இறுதித் தேர்வின் போது பீதர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவரிடம், அதிகாரிகள் பூணூலை கழற்றுமாறு தெரிவித்தனர். அதற்கு மாணவர்கள் மறுத்துவிட்டார்.
இதனால் அவரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்காததையடுத்து அவர் தேர்வு எழுதாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக தேர்வாணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று சிவமொக்கா மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் 2 மாணவர்களின் பூணூலை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெட்டி அகற்றினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடபட்டது. இதற்கிடையே பூணூல் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களின் பூணூலை வெட்டி அகற்றிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் பிராமணர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் 2 மாணவர்கள் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக வருவதும், அவர்களை ஊர்க்காவல் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அந்த 2 மாணவர்களிடமும் பூணூலை கழற்ற சொல்லி நெருக்கடி கொடுப்பதும், இல்லையேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிப்பதும் பதிவாகி இருந்தது.
ஆனால் பூணூலை கழற்ற மாணவர்கள் மறுத்ததும், அதனை ஊர்க்காவல் படையினர் 2 பேரும் தங்கள் கைகளில் இருந்த கத்தரிக்கோலால் வெட்டி அகற்றுவதும் தெரியவந்தது.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊர்க்காவல் படையினர் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்