அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனையில் முதியவரை தரதரவென இழுத்து சென்ற மருத்துவர்!
Dinamaalai April 21, 2025 02:48 AM

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில், பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் 77 வயது முதியவரை அடித்து, பின்னர் அவரை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கிறார். இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ ஏப்ரல் 17ம் தேதி காலை 11:30 மணிக்கு எடுத்ததாக தெரிகிறது. பொதுமக்கள் வீடியோ பதிவு செய்த போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் அதிலிருந்து தப்பியோடுவதையும் காணமுடிகிறது. இந்த வீடியோ ஏப்ரல் 19 அன்று இணையத்தில் வெளியானதையடுத்து, சத்தர்பூர் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

உதவ்லால் ஜோஷி என்ற முதியவர் தனது மனைவியை வயிற்றுவலி பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருவரும் மருத்துவமனை வரிசையில் காத்திருந்தபோது, அங்கு வந்த மருத்துவர், கூட்டத்தைப் பார்த்து கோபப்பட்டு, “ஏன் இப்படி நிற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.

அந்த வாக்குவாதத்தில், மருத்துவர் முதியவரின் கன்னத்தில் அறைந்ததாகவும், பின்னர் அவரை இழுத்துச் சென்று போலீஸ் காவலில் வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தர்பூர் சுகாதார கண்காணிப்பாளர் டாக்டர் ஜி.எல். அஹிர்வார், “இந்த சம்பவம் குறித்து மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு மருத்துவமனை போன்ற இடத்தில் நடந்திருக்கக்கூடாத செயல். முழுமையாக விசாரிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.