புராண இதிகாசப்படங்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்தான். ஆரம்பத்தில் இவர் வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக இருந்தார். தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, திருவருட்செல்வர், நவராத்திரி ஆகிய படங்களை இயக்கியவர் இவர்தான்.
1974க்குப் பிறகு இவர் தயாரித்து இயக்கிய பல படங்கள் படுதோல்வி. அப்புறம் என்ன செய்யன்னு தெரியாமல் முழித்த இவருக்கு எம்ஜிஆர் படம் ஒன்றைத் தயாரிங்க. மீண்டு விடலாம்னு இவரது நண்பர்கள் சொன்னார்களாம்.
அப்படி இவர் தயாரித்த படம்தான் நவரத்தினம். இந்தப் படத்திற்கு பூஜை போட்ட ஒருவாரத்திற்குள் அனைத்து ஏரியாக்களிலும் விற்று விட்டன. ஒரே வாரத்திற்குள் ஏபி.நாகராஜனின் கைக்குப் பணம் வந்து சேர்ந்தன.
1977ல் வெளியானது. படத்தில் எம்ஜிஆரின் பெயர் தங்கம். அவர் செல்வந்தராக இருந்தாலும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நாடோடி போல அலைகிறார். பல பெண்களை சந்திக்கிறார். ஆபத்தில் இருந்து பலரைக் காப்பாற்றுகிறார். அவரது தங்கமான குணத்தைக் கண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அது காதலாகிறது.
எம்ஜிஆரோ மறுக்கிறார். மாணிக்கம், புஷ்பா, நீலா, வைரம், முத்தம்மா, கோமதி, மரகதம், வைடூரியம், பவளம் என அந்தப் பெண்கள் நவமணிகளாக வருகின்றனர். கடைசியில் யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதை. படம் 50 நாள், 60 நாள் என்றுதான் ஓடியது. ஆனால் வசூல் வேட்டையாடியது.
ஏபி.நாகராஜன் எம்ஜிஆரை வை;து இயக்கிய முதல் படம் இதுதான். அதே போல அவரது கடைசி படமும் இதுவாகவே அமைந்ததுதான் வேதனை. இந்தப் படம் வெளியானதும் மாரடைப்பால் காலமானார்.