விராட் கோலி புதிய சாதனை - இரண்டே நாட்களில் பஞ்சாபை பழி தீர்த்த ஆர்சிபி
BBC Tamil April 21, 2025 03:48 AM
Getty Images

முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 11 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்களூருவில் ஆர்சிபி அணியை மோசமாக தோற்கடித்த பஞ்சாப்புக்கு, அவர்களின் சொந்த மைதானத்தில் வைத்து ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது. இந்த சீசனில் வெளிமைதானங்களில் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் ஆர்சிபி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 புள்ளிகளில் 5 அணிகள்

இதன் மூலம் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி ஏற்பட்டு, 5 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளனர். நிகர ரன்ரேட் மட்டுமே அணிகளின் வரிசையை நிர்ணயிக்கிறது, நிகர ரன்ரேட்டும் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே பெரிதாக வேறுபாடு இல்லை. இதனால் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், லக்னெள அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் செல்ல கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிரடித் தொடக்கம்

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பிரயான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில்பறக்கவிட்டனர்.

பிரவின்ஸ் ஆர்யா 22 ரன்கள் சேர்த்திருந்தபோது குர்னல் பாண்டியா வீசிய 5வது ஓவரில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 42 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது.

நிலையற்ற பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் Getty Images

பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரில் குர்னல் பாண்டியா பந்துவீச்சில் பிரப்சிம்ரன் 33 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஷெப்பர்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பஞ்சாப் அணியின் முன்னணி ரன்சேர்ப்பாளர்களில் ஸ்ரேயாஸ் முதலிடத்தில் உள்ளார். 7 இன்னிங்ஸில் 3முறை அரைசதத்துக்கு மேல் ரன்களும் 4 முறை 10 ரன்களுக்குள்ளும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்து நிலையற்ற தன்மையை பேட்டிங்கில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 2024 ஐபிஎல் தொடரில் 147 ஆகஇருந்தநிலையில் 2025 சீசனில் 194 ஆக உயர்த்தியும் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை.

4வது விக்கெட்டுக்கு வந்த நேஹல் வதேரா 5 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.பஞ்சாப் கிங்ஸின் நடுவரிசை பேட்டிங் ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது. 62 ரன்களுக்கு ஒருவிக்கெட் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி, அடுத்த 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகள் என 29 ரன்கள் சேர்த்தநிலையில் சூயஸ் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. இங்கிலிஸ் ஆட்டமிழந்த அடுத்த சிறிது நேரத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் சூயஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நடுப்பகுதி ஓவர்களில் தடுமாற்றம்

இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. நல்ல தொடக்கத்தை அளித்தபோதிலும், அதைக் கட்டுக்கோப்பாக பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல நடுவரிசை பேட்டிங் பஞ்சாப் அணியில் வலுவாக இல்லை. குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழப்பதால், டெத் ஓவர்களில் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல முடியவில்லை. செட்டில் பேட்டர்கள் நிலைத்து நின்றால் மட்டுமே பெரிய ஸ்கோருக்கு செல்கிறது. நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் அணி 67 ரன்கள் மட்டுமே சேர்த்தது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டிய பஞ்சாப் அணி அடுத்த 8 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய சஷாங்க் சிங் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து ஒற்றைப்படை ரன்னைக் கடக்கவில்லை. கடைசி வரிசையில் சஷாங் சிங் களமிறங்குவதால் அவரால் செட்டில்ஆகி பேட் செய்ய நீண்ட நேர்ம் ஆகிறது. இந்த சீசனில் சஷாங் சிங் 118 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

டெத் ஓவரில் மிரட்டிய ஆர்சிபி Getty Images

7-வது விக்கெட்டுக்கு யான்சென், சஷாங் சிங் இருவரும் ரன்களைச் சேர்க்க முயன்றனர். ஆனால், புவனேஷ்வர், ஹேசல்வுட் இருவரும் சேர்ந்து டெத் ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை ரன் சேர்க்க அனுமதிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் 8 யார்கர்களை வீசி பஞ்சாப் பேட்ர்களை திணறவிட்டனர், இதனால் கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணி 170 ரன்கள் சேர்த்துவிடலாம் என்று கற்பனையில் இருந்தநிலையில் 157 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சஷாங் சிங் 31 ரன்களிலும் யான்சென் 25 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பில் சால்ட்(1) முதல்ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆர்சிபி இழந்தது. 2வது விக்கெட்டுக்கு படிக்கல், விராட் கோலி ஜோடி சேர்ந்தனர்.

பஞ்சாப் பந்துவீ்ச்சாளர்களின் பந்துவீச்சை படிக்கல், விராட் கோலி வெளுத்து வாங்கி, பவுண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டனர். ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்வாகவே வைத்திருந்தனர். பவர்ப்ளேயில் ஆர்சிபி ஒருவிக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பேட் செய்த படிக்கல் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

கோலி புதிய சாதனை Getty Images

இருவரின் அதிரடியான ஆட்டத்தால் பார்ட்னர்ஷிப் 65 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. 11.4 ஓவர்களில் ஆர்சிபி 100 ரன்களை எட்டியது. விராட் கோலி நிதானமாக ஆடி 43 பந்துகளில் அரைசதம் எட்டி புதிய சாதனையை படைத்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலி 67வது முறையாக அரைசதம் அதற்கு மேல் ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் எட்டாத சாதனையை கோலி செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக கோலி நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், கடந்த 4 போட்டிகளில் பஞ்சாபுக்கு எதிராக 3 அரைசதங்களை கோலி விளாசியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் 8 போட்டிகளில் கோலி குறைந்தபட்சம் 20 ரன்கள் வரை பஞ்சாப்புக்கு எதிராகச் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணிக்கு எதிராககோலி 1031 ரன்களை சேர்த்து, அதில் 5 அரைசதங்கள், ஒருசதம் அடங்கும். இந்த முறையும் கோலி பஞ்சாப் அணிக்கு எதிராக வலிமையான ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

சிறப்பாக ஆடிய படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்களில்(4சிக்ஸர்,5பவுண்டரி) ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கோலி, படிக்கல் 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த பட்டிதார் நிதானமாக ஆடவே, கோலி வேகமாக ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார்.

பட்டிதார் 12 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 11, கோலி 54 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.5 ஓவர்களில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்சிபி வெற்றிக்கு காரணம் Getty Images

ஆர்சிபியின் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். குர்னல் பாண்டியா, சூயஷ் சர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டு ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.

ஹேசல்வுட், புவனேஷ் இருவரும் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் டெத் ஓவர்களில் இருவரின் துல்லியமான பந்துவீச்சும், 8யார்கர்களும் பஞ்சாப் பேட்டர்களை நிலைகுலையவைத்தது, கடைசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். பஞ்சாப் அணியில் வலிமையான பேட்டர்கள்இருந்தபோதிலும் 157 ரன்களுக்குள் சுருட்டிய பெருமை பந்தீவீச்சாளர்களுக்குத்தான்.

அடுத்ததாக விராட் கோலியின் பேட்டிங் குறிப்பிட்டே தீர வேண்டும்.பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் எப்போதுமே கோலி சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த 4இன்னிங்ஸில் பஞ்சாப் அணிக்கு எதிராக 3 அரைசதங்களை கோலிவிளாசியுள்ளார், கடந்த போட்டியில் மட்டுமே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்திலும் கோலியின் ஆங்கர் ரோல் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியது. வியாழக்கிழமை பெங்களூருவில் நடந்த போட்டியில் மோசமாக ஆர்சிபி தோற்ற நிலையில், அதற்கு ஈடுகட்டவே கோலி கடைசிவரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்து ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

இம்பாக்ட் ப்ளேயராக வந்த தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய படிக்கல் ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று அரைசதம் அடித்தார். பேட்டிங்கில் இருவரின் ஆட்டம்தான் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

Getty Images இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. பந்துவீச்சாளர்களே காரணம்

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள்தான். தேவ்தத், கோலி இருவரும் சிறப்பாக ஆடினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். பந்துவீ்ச்சாளர்கள் வெற்றிக்கான பாதை அமைத்தனர், அதில் பேட்டர்கள் பயணித்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தியது சிறப்பு" எனத் தெரிவித்தார்

Getty Images அடுத்த ஆட்டம்

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

நாள் - ஏப்ரல் 25

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

நாள் - ஏப்ரல் 23

இடம் – ஹைதராபாத்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் - ஏப்ரல் 24

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)

ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.