அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!
WEBDUNIA TAMIL April 21, 2025 09:48 PM


அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் வெளியே வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத் துறையின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால், அவர் விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ₹2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில், கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து, ஜாபர் சாதிக் தரப்பில் வாதிடப்பட்டதால் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, அவர் இன்னும் ஓரிரு நாளில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.