தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் 58 வயது சரசு. இவர் நேற்று மாலை பொக்காபுரம் பகுதியில் பணியை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது சாலை நடுவே காட்டு யானை ஒன்று நின்று வாகனங்களை மறித்துள்ளது.
இதையடுத்து சரசுவை அவரது கணவர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லிவிட்டு வாகனத்தை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது யானை திடீரென சரசுவை நோக்கி வந்த நிலையில், அவர் நிலைதிடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில், அவர் அருகில் வந்த யானை தாக்கிவிட்டது.
இதில், படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.