தமிழகத்தில் திருப்பத்தூர் தபேதர் முத்துசாமி தெருவில் வசித்து வருபவர் பாபு . இவரது மகன் ஆர்யா. இவர், பெங்களூருவில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விடுமுறை காரணமாக ஆர்யா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றிருந்தார்.
அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டு பெரியவர்களை அழைத்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.